ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் இடைத்தேர்தலில்.. போட்டியிட தடை விதிக்கணும்! ஐகோர்ட்டில் வழக்கு
சென்னை: தேர்தல் முடிவுகள் வெளியான சில நாட்களிலேயே தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்தவும் தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் காசி ராமலிங்கம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், சத்தியபாமா, ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய 6 பேரும் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்ததை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்
மரகதம் குமரவேல், சத்தியபாமா உள்ளிட்ட 6 பேரும் தனிப்பட்ட நலன்கள் மற்றும் சுயலாபத்திற்காகவே தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியான மிகக் குறுகிய காலத்திலேயே மக்கள் அளித்த தீர்ப்பை புறக்கணித்து அரசியல் காரணங்களுக்காக பதவி விலகுவது ஜனநாயக நடைமுறைக்கு எதிரானது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இத்தகைய ராஜினாமாக்களால் அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் தேவையற்ற கூடுதல் சுமை ஏற்படுவதுடன், பொதுமக்களின் வரிப்பணமும் தேர்தல் செலவுக்காக வீணாவதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் செலவு
ஒரு எம்எல்ஏ நியாயமான காரணம் இல்லாமல் பதவியை ராஜினாமா செய்தால், அதனால் ஏற்படும் இடைத்தேர்தல் செலவை சம்பந்தப்பட்ட முன்னாள் எம்எல்ஏக்களிடமே வசூலிக்கும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது. மேலும், மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்காமல் பதவி விலகியவர்கள் உடனடியாக நடைபெறும் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் விதிமுறைகள் கொண்டுவர வேண்டும் எனவும் மனுதாரர் தெரிவித்துள்ளார்.
நியாயமான காரணமின்றி எம்எல்ஏக்கள் பதவி விலகுவதை தடுக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம் இதுபோன்ற விவகாரங்களில் கண்களை மூடிக்கொண்டு இருக்காமல், மக்கள் அளித்த தீர்ப்புக்கு எதிராக அரசியல் காரணங்களுக்காக பதவி விலகுவோர் உடனடியாக நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வழக்கு
தற்போது தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த இரண்டு தொகுதிகளும் மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ராஜினாமா செய்ததால் காலியானவை. பொது தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற இவர்கள், இப்போது தவெக சார்பில் களமிறங்குகிறார்கள். இந்தச் சூழலில் தான் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது. அல்லது மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல்களையும் நடத்தக் கூடாது என்று கோரிய வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில், அத்தோடு இந்த வழக்கும் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications
