மகளிர் உரிமை தொகை.. சர்ப்ரைஸ் கொடுக்கும் தமிழ்நாடு அரசு! இதை கவனிச்சீங்களா!
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், கொண்டுவரப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தற்போது வரை மொத்தம் 1.30 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில், இந்த திட்டத்தில் மாற்றம் செய்ய தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆணும் பெண்ணும் சரி சமம் என்பதை வலியுறுத்தும் விதமாக, இந்த திட்டம் பெண்களுக்கு சுயமரியாதையை கொடுக்கும் திட்டமாக அறிமுகமானது. கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் 1.06 கோடி பெண்கள் இதன் மூலம் பயன்பெற்றனர். இத்திட்டத்தில் அடுத்தடுத்து பயனாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.

இந்த திட்டம் இரண்டு முக்கிய நோக்கங்களைக் கொண்டது. குடும்பத்திற்காக வாழ்நாளெல்லாம் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்மையானது. அடுத்து, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்பது, பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும்.
யார் யாருக்கு உரிமைத்தொகை வழங்கப்படும்?
குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர். ஒவ்வொரு தகுதி வாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத் தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம். குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார். குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத் தலைவரின் மனைவி குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார் என அரசு கூறுகிறது. எனவே குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும்.
தகுதிகள் என்ன?
ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள், ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களில் உள்ள, குடும்ப தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும். பொருளாதாரத் தகுதிகளுக்காகத் தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை.
விண்ணப்பிக்கும் நடைமுறைகள்
குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற, கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். அதாவது, செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்திற்கு பொது விநியோக நியாய விலைக் கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.
இனிப்பு செய்தி
இப்படி இருக்கையில், தற்போது வழங்கப்பட்டு வரும், ரூ.1,000 மகளிர் உரிமை தொகையை ரூ.1,500 ஆகவோ அல்லது ரூ.2,500 ஆகவோ உயர்த்த தமிழக அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொங்கல் முதல் உரிமைத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications