மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 இன்று 2ஆம் கட்ட விண்ணப்ப பணிகள் தொடக்கம்.. “இது கட்டாயம்”.. பறந்த ஆர்டர்!
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இரண்டாம் கட்டமாக இன்று முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஆகஸ்ட் 5 முதல் இரண்டாம் கட்ட விண்ணப்பப் பதிவு தொடங்குகிறது. முதற்கட்ட விண்னப்ப பதிவில் ஏற்பட்ட குழப்பங்கள் இப்போது ஏற்படாமல் தவிர்க்க வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மகளிர் உரிமைத்தொகை: பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்தநாளன்று தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து சமீபத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்களுடனான கூட்டத்தில் தகுதியுள்ள அனைவருக்கும் உரிமைத்தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து உரிமைத்தொகை திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்க முதற்கட்ட விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் முகாமை தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 24ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இரண்டாம் கட்டமாக விண்ணப்பங்கள்: தமிழ்நாடு முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்களை பதிவு செய்யும் முகாம் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான 2 ஆம் கட்ட விண்ணப்பம் வழங்கும் பணி இன்று தொடங்குகிறது.
வீடு வீடாக விண்ணப்பம் மற்றும் டோக்கன்கள் வழங்கும் பணி இன்று தொடங்குகிறது. வரும் 4 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம் செய்யும் பணி நடைபெறும். அதனைத்தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 14,825 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவு நடைபெற உள்ளது.
டோக்கன் மற்றும் அப்ளிகேஷன்: பொதுமக்கள் இந்த விண்ணப்பங்களை பெறுவதற்காக ரேஷன் கடைக்கு வர தேவையில்லை. வீடுகளுக்கே வந்து விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கப்படும். விண்ணப்பம் மற்றும் டோக்கன் பெற்றுக்கொண்ட குடும்ப தலைவிகள் விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்து வர வேண்டும். அப்போது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றையும் எடுத்து வர வேண்டும்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் அண்மையில், நடந்த கூட்டத்தில், கிராமப்புற பகுதிகளில் விண்ணப்பம், டோக்கன் விநியோகம் செய்யப்பட்டதில் இருந்த குறைபாடுகளை சரிசெய்து, நகர்ப்புற பகுதிகளில் விநியோகம் செய்வது தொடர்பாக புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
முக்கிய உத்தரவு: அதன்படி, இன்று முதல் நான்கு நாட்களுக்கு முழுமையாக விண்ணப்பங்களை விநியோகம் செய்ய வேண்டும். எந்தெந்த பகுதிகளுக்கு எந்தெந்த நாட்களில் விண்ணப்பம், டோக்கன் வழங்கப்பட உள்ளது என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு, அதன்படி விநியோகம் செய்ய வேண்டும்.

500 குடும்ப அட்டைகள் உள்ள ரேஷன் கடைகளில் ஒரு நாளைக்கு 60 வீதமும், 1000 குடும்ப அட்டைகளுக்கு ஒரு நாளைக்கு 120 வீதமும், 1500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு நாளைக்கு 180 வீதமும், 2000 குடும்ப அட்டைகளுக்கு ஒரு நாளைக்கு 240 வீதமும் விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும்.
நேரத்தை குறிப்பிட வேண்டும்: ஒரு நாளுக்கான டோக்கன்களை அனைத்து பகுதிகளுக்கும் விநியோகம் செய்யாமல், ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதியாக பிரித்து டோக்கன் வழங்க வேண்டும். விண்ணப்பங்களில் குடும்ப அட்டை எண்ணை தவறாமல் குறிப்பிட வேண்டும். முகாம் நடக்கும் நாள், நேரத்தை டோக்கனில் தெளிவாக குறிப்பிட வேண்டும், காலை மதியம் என்று இல்லாமல் மணி நேரத்தை குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications