மகாளய அமாவாசை வேள்வி பூஜை.. நவராத்திரி அகண்ட தீபம். ஜோதியாக கலந்த ஆன்மீக குரு பங்காரு அடிகளார்
சென்னை: ஆன்மிகத்தை எளிமைப்படுத்தி ஏழை எளிய மக்களிடம் ஆன்மிகத்தைக் கொண்டு சென்றவர் அடிகளார். ஆதிபராசக்தி கோயிலில் அனைத்து நாட்களிலும் பெண்கள் வழிபடலாம் என்று கடவுள் வழிபாட்டில் புரட்சி செய்தவர் பங்காரு அடிகளார். அம்மனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படும் இந்த நேரத்தில் அகண்ட தீபத்தை ஏற்றி வைத்து ஆதிபராசக்தியின் பாதங்களில் ஜோதியாக கலந்து விட்டார் பங்காரு அடிகளார்.
ஆன்மீக சித்தர்.. ஆதிபரசக்தி பக்தர்களால் அம்மா என்று அன்போடு அழைக்கப்படுபவர் பங்காரு அடிகளார். அவரது அருள்வாக்கு கேட்கவே லட்சக்கணக்கான பக்தர்கள் மாதந்தோறும் ஆதிபராசக்தியை தரிசனம் செய்யவும், அம்மாவை தரிசனம் செய்யவும் மேல்மருவத்தூருக்கு வருகை தருவார்கள். பெண் பக்தர்களை கருவறைக்குள் அனுமதித்து ஆன்மீக புரட்சி செய்தவர். ஆண் பெண் என்ற பேதமின்றி சாதிமத பேதமின்றி அனைவரும் இருமுடி கட்டி வழிபடுவது இந்த ஆலயத்தின் சிறப்பம்சமாகும்.

பின்தங்கிய பகுதிய பகுதியாக இருந்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் கட்டப்பட்ட பிறகு வளர்ச்சியடைந்த பகுதியாக மாறியது.
ஆதிபராசக்தி சித்தர் பீடம் சார்பில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகள், பள்ளிகள் என ஏராளமான கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
சிறுவயதில் இருந்த ஆன்மீக வழியில் பயணப்பட்டு ஆதிபரசத்தியின் அம்சமாகவே மாறிய அம்மா பங்காரு அடிகளார் கடந்த மார்ச் மாதம் தனது 83ஆவது பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாடினார். பல கோடி ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன. மகாளய அமாவாசை தினமான சனிக்கிழமையன்று வேள்வி பூஜை நடைபெற்றது. இதில் ஆன்மிக குரு அடிகளார் பொது வேள்வியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா 11 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இதேபோன்று இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த ஞாயிறன்று தொடங்கியது. அதிகாலை 3 மணி அளவில் மங்கல இசை முழங்க ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 11 மணி அளவில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் வந்த ஆன்மிக குரு பங்காரு அடிகளாருக்கு சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர்.
ஆன்மிக குரு பங்காரு அடிகளார் சித்தர் பீடத்தை வலம் வந்து கருவறையில் உள்ள ஆதிபராசக்தி அம்மனுக்கு தீபாரதனை காட்டி கருவறையில் வைக்கப்பட்டிருந்த நவராத்திரி அகண்ட தீபத்தை ஏற்றி வைத்தார். ஏற்றிவைக்கப்பட்ட அகண்ட தீபத்தை தெய்வங்கள் வேடம் அணிந்த சிறுவர், சிறுமிகள், பெண்கள் ஆகியோர் அகண்ட தீபத்துடன் சித்தர் பீடத்தை வலம் வந்து கருவறையில் வைத்தனர்.
இதனை தொடர்ந்து கலந்து கொண்ட பக்தர்கள் அகண்ட தீபத்தில் முக்கூட்டு எண்ணெய் ஊற்றி ஆதிபராசக்தி அம்மனை வழிபட்டனர். இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நவராத்திரி விழா நாட்களில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் காப்புகள் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெறும்.
நவராத்திரி பண்டிகைக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆதிபராசக்தி ஆலயத்திற்கு வந்திருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார் சக்தி அம்மா பங்காரு அடிகளார். அவரது மறைவு பக்தர்களுக்கு பேரிடியாக இறங்கியுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் மேல்மருவத்தூருக்கு திரண்டு வந்து கொண்டிருக்கின்றனர். அம்மா.. அம்மா என்ற கதறல் சத்தம் எங்கும் கேட்கிறது. பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு இன்று மாலை 5 மணிக்கு அவருக்கு இறுதி சடங்கு நடைபெற உள்ளது.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் கருவறை அருகே உள்ள அருள்வாக்கு கூறி வந்த இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்ட உள்ள நிலையில் நினைவிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. புற்றாக வந்து வேப்ப மரத்தில் பாலாகி வடிந்து தன்னை உணர்த்தி பங்காரு அடிகளாரை ஆட்கொண்ட ஆதிபராசக்தியின் அருள் பாதங்களில் ஜோதியாக கலந்து விட்டார் பங்காரு அடிகளார்.












Click it and Unblock the Notifications