சென்னை தொழில் அதிபர் வீட்டில் தங்க, வைர நகைகள்.. சிறுக சிறுக எடுத்த சங்கீதா.. சிக்கியது எப்படி
சென்னை: சென்னை போயஸ் கார்டனில் வசிப்பவர் வனிதா சித்தார்த் என்பவர் தொழிலதிபரான இவர், டிஜிட்டல் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய வீட்டில் உள்ள லாக்கரில் இருந்து தங்க, வைர நகைகளும், ரொக்க பணமும் சமீபத்தில் திருட்டுப்போயிருந்தது. அது பற்றி விசாரித்த போது, அங்கு வேலை செய்த சங்கீதா என்ற பெண் மீது புகார் எழுந்தது. அவரை கைது செய்தனர். எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்.
சென்னையில் பிரபல தொழில் அதிபர்கள், நடிகர், நடிகைகள் என பெரிய விஐபிக்ககள் அதிகம் வாழும் பகுதி தேனாம்பேட்டையில் உள்ள போயஸ் கார்டன் பகுதி.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு, நடிகர் ரஜினிகாந்த் வீடு, சசிகலா வீடு, நடிகர் தனுஷ் வீடு, நடிகை நயன்தாரா வீடு மற்றும் தொழில் அதிபர் இந்திரா நூயி பல்வேறு தொழில் அதிபர்கள் வீடுகள் போயஸ் கார்டனில் உள்ளது.

பிரபல தொழில் அதிபர்களின் வீடுகளில் வேலை செய்யும் பெண்களில் ஒரு சிலர் திருட்டு செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர். கடந்த சில வருடம் முன்பு நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்க நகைகளை திருடிய வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டார். அவர் ரஜினி மகளின் வீட்டில் கொள்ளை அடித்து, சொந்தமாக வீடு கட்டியதாகவும், கடன்களை எல்லாம் அடைத்ததாகவும் அப்போது செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பல கட்ட விசாரணைக்கு பிறகு நகை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்தார்கள்.
இந்நிலையில் அதே போன்று ஒரு சம்பவம் போயஸ் கார்டன் பகுதியில் மீண்டும் நடந்துள்ளது. சென்னை போயஸ் கார்டனில் வசிப்பவர் வனிதா சித்தார்த் என்பவர் தொழிலதிபரான இவர், டிஜிட்டல் பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருடைய வீட்டில் உள்ள லாக்கரில் இருந்து தங்க, வைர நகைகளும், ரொக்கப் பணமும் சமீபத்தில் திருட்டுப் போயிருந்தது.
இது தொடர்பாக தொழில் அதிபர் வனிதா சித்தார்த் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சென்னை தேனாம்பேட்டை போலீசார் திருட்டு நடந்த தொழிலதிபர் வீட்டில் நேரடியாக விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரது வீட்டின் வேலைக்கார பெண் சங்கீதா (25) என்பவர் நகை-பணம் திருட்டில் ஈடுபட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. ஆனால் வேலைக்கார பெண் சங்கீதா தலைமறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த சங்கீதாவை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். வேலைக்கார பெண் சங்கீதாவிடம் இருந்து 24 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. சங்கீதா சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் ஆவார். சிறுக, சிறுக நகைகளையும், பணத்தையும் திருடியதாக போலீசாரிடம் சங்கீதா வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் போயஸ் கார்டன் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications