Exclusive: நாட்களை எண்ணி கொண்டிருக்கிறேன்..சீமான் அப்படி பேசியிருக்க கூடாது! நத்தம் சிவசங்கரன் ஓபன்!
சென்னை: நாம் தமிழர் கட்சியிலிருந்து பல முக்கிய புள்ளிகள் விலகி விட்ட நிலையில் சீமானுக்கு நெருக்கடி அதிகரித்து இருக்கிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து 99.99 சதவீதம் விலகி விட்டதாகவும், நாம் தமிழர் கட்சியில் நான் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறேன் என மனம் திறந்து பேசி இருக்கிறார் அந்த கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் நத்தம் சிவசங்கரன். ஒன் இந்தியா தமிழுக்கு சிறப்பு பேட்டி அளித்த அவர், நிர்வாகிகள் குறித்து சீமான் அப்படி பேசி இருக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகல் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கட்சியின் முக்கிய தலைவர்களும், மாவட்ட நிர்வாகிகளும் அடுத்தடுத்து விலகி வருகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கட்சியில் முக்கிய நிர்வாகியான சாட்டை துரைமுருகனின் ஃபோனில் இருந்து எடுக்கப்பட்டு, பரப்பப்பட்ட ஆடியோக்கள் தான் இதற்கெல்லாம் காரணம். ஏற்கனவே கட்சியில் இருந்து கிருஷ்ணகிரி, விழுப்புரம், நீலகிரி, ராணிப்பேட்டை என பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் விலகி விட்டனர்.
மேலும், மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட தலைவர், செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள், குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகங்களாக இருந்த ராஜீவ் காந்தி, கல்யாண சுந்தரம், காளியம்மாள் ஆகியோர் விலகி விட்டனர். தற்போதைக்கு கட்சியில் இருக்கும் முக்கிய முகங்கள் என்றால் அது சாட்டை துரைமுருகனும், நத்தம் சிவசங்கரமும் தான்.
நத்தம் சிவசங்கரன் 20 ஆண்டுகளுக்கு மேலாக நாம் தமிழர் கட்சியில் பயணித்து வருபவர். 20 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ் தேசிய அரசியலில் ஈடுபட்டு இருக்கும் அவர், சீமான் கட்சி ஆரம்பித்த போது அவருடன் கை கோர்த்தார். திண்டுக்கல் மட்டுமல்லாது தென் மாவட்டங்கள் பலவற்றிலும் கட்சியை பலப்படுத்தியதிலும் கட்டமைப்பை உருவாக்கியதிலும் நாம் தமிழர் சிவசங்கரனின் பங்கு முக்கியமானது.
குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடி வருபவர். இந்த நிலையில் சிவசங்கரன் குறித்து சீமான் பேசியதாக சில ஆடியோக்கள் வெளியானது. இதனால் மன வருத்தத்தில் இருக்கும் அவர் கட்சி நிகழ்வுகளில் புறக்கணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திண்டுக்கல் ஆலோசனைக் கூட்டத்திலும், பழனி பாபா நினைவேந்தல் கூட்டத்திலும் புறக்கணிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மகளிர் பாசறை காளியம்மாள் கட்சியில் இருந்து வெளியேறிய நிலையில் நாம் தமிழர் சிவசங்கரன் விலகல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் ஒன் இந்தியா தமிழிலும் பேசிய சிவசங்கரன் கட்சியில் தனது நாட்களை எண்ணிக்கொண்டு இருப்பதாக கூறினார். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய அவர்" ஆரம்பத்தில் இருந்தே சீமானிடம் மிக நெருக்கமான தம்பியாக நிர்வாகியாக இருந்தேன். ஆனால் கட்சியில் ஜனநாயகம் இல்லை. கட்சிக்காக உழைத்த தொண்டர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை.
என்னை குறித்து ஆடியோ ஒன்று வெளியான போது சீமானை தொடர்பு கொண்டு பேசினேன். அதற்கு அவர் மன்னிப்பு அல்லது விளக்கமோ அளிக்கவில்லை. அப்படித்தான் பேசுவேன் என்ற ரீதியில் பேசினார். அன்றில் இருந்து கிட்டத்தட்ட எட்டு மாதங்களாக நான் நாம் தமிழர் கட்சியில் எனது நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறேன். கட்சியில் இருந்து 99.99 சதவீதம் விலகி விட்டேன். ஆனால் மாற்றுக் கட்சியில் இணைந்தோ அல்லது பணம் சம்பாதிப்பது எனது எண்ணம் கிடையாது. நிச்சயம் தமிழ் தேசிய அரசியலுக்காகவும் தமிழக மக்களுக்காகவும் எனது போராட்டம் இருக்கும்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எனக்கு மனம் வருத்தம் இருப்பது உண்மைதான். கட்சிக்காக உழைத்த நிர்வாகிகளை எப்படி பொதுவெளியில் அல்லது ஆடியோவில் ஒருமையில் பேச அவரால் முடிந்தது என தெரியவில்லை. சீமான் ஒரு நிகழ்ச்சிகள் பேசுகிறார் என்றால் அந்த நிகழ்ச்சிக்காக ஒரு மாதம் உழைக்கிறார்கள் தொண்டர்கள். அவர் தங்குவதிலிருந்து, கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பது வரை அனைத்தும் நாங்கள் உழைத்த பணம். ஆனால் அவற்றை அனுபவித்து விட்டு நிர்வாகிகளை தரக்குறைவாக பேசுவது எப்படி என தெரியவில்லை.
இது குறித்து வருத்தம் தெரிவிக்காவிட்டாலும் விளக்கம் அளித்திருக்கலாம். அல்லது என்னை நேரில் அழைத்து கூட பேசி இருக்கலாம். ஆனால் சீமானிடம் இருந்து நான் எதிர்பார்த்த வார்த்தைகள் கிடைக்கவில்லை. ஏற்கனவே அக்கா காளியம்மாள் உள்ளிட்டோர் சென்று விட்டனர். ஆனால் நான் செல்லவில்லை. இருந்தபோதும் கட்சியின் கடைசி நாட்களில் நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications