பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற கமல்... சங்கையா குழுவால் மனம் வெம்பும் ம.நீ.ம. நிர்வாகிகள்..!
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றிருப்பது அக்கட்சி நிர்வாகிகள் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தேர்தல் பணிகளில் கமல் கவனம் செலுத்துவார் என எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு கமலின் இந்த யு-டர்ன் நடவடிக்கை அவர் மீதான நம்பிக்கையை அசைத்துப் பார்த்துள்ளது.
இதனிடையே சங்கையா சொல்யூசன்ஸ் என்ற பெயரில் ம.நீ.ம.வில் செயல்பட்டு வரும் தேர்தல் வியூக குழுவால் மாவட்ட நிர்வாகிகள் பல மனம் வெம்பியுள்ளனர்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக அவர் கட்சி தொடங்கியவுடன் மக்கள் நீதி மய்யத்தில் பல தரப்பட்டோரும் ஆர்வமுடன் இணையத் தொடங்கினர். கமலஹாசனால் ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும் மிக்கபெரிய மாற்று சக்தியாக தமிழகத்தில் உருவெடுப்பார் என்ற நம்பிக்கையில் தொழிலதிபர்கள், வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், முன்னாள் அரசு அதிகாரிகள் என பலரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் கமலின் அண்மைக்கால செயல்பாடுகளும், நடவடிக்கைகளும் நிர்வாகிகளை குழப்பம் அடையச் செய்துள்ளன.

சட்டமன்றத் தேர்தல்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கட்சியை வலிமைப்படுத்தி தேர்தல் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவார் கமல் என எதிர்பார்த்தவர்களுக்கு பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக சென்றிருப்பது ஏமாற்றத்தை அளித்துள்ளது. அறிக்கை அரசியல் தேர்தலுக்கு உதவாது என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தை பொறுத்தவரை, மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் பல நிர்வாகிகள் தவித்து வருகின்றனர்.

தேர்தல் வியூகம்
இதனிடையே திமுகவுக்கு ஐ-பேக்கும், அதிமுகவுக்கு சுனில் அன் கோவும் உள்ளது போல் கமல்ஹாசன் கட்சிக்கு சங்கையா சொல்யூசன்ஸ் என்ற தேர்தல் வியூக குழு செயல்பட்டு வருகிறது. முன்னாள் ஊடகவியலாளர்கள் மூலம் நடத்தப்படும் இந்த நிறுவனத்திற்கு பல லகரங்கள் ம.நீ.ம.வில் இருந்து கப்பம் கட்டப்படுகிறது. கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை அலுவலகத்தில் சங்கையா சொல்யூசன்ஸ் குழு முகாமிட்டு தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறது.

கட்சிப்பணிகள்
தமது மேற்பார்வையில் கண்காணிக்க வேண்டிய கட்சிப்பணிகளை முழுக்க முழுக்க சங்கையா சொல்யூசன்ஸ் நிறுவனத்திடம் கமல் ஒப்படைத்திருப்பது மாவட்ட நிர்வாகிகள் பலருக்கு விருப்பமில்லை.
இதனிடையே இது குறித்து நம்மிடம் பேசிய ம.நீ.ம. முக்கிய நிர்வாகி ஒருவர், தலைவரை பார்க்க முடியாத அதிருப்தியில் ஒரு சிலர் இப்படி கூறியிருக்கக்கூடும். சங்கையா சொல்யூசன்ஸ் செயல்பாடுகளை பொறுத்தவரை திருப்திகரமாக உள்ளது என்றும், கட்சியின் வளர்ச்சிக்கு பல மாற்றங்களை செய்து வருவதாகவும் விளக்கம் அளித்தார்.

கட்சிக்கு பலம்
கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றிருப்பதன் மூலம் மக்கள் நீதி மய்யம் வலிமை அடையுமே தவிர வலிமை இழக்காது எனக் கூறுகிறார் அரசியல் ஆய்வாளர் ரவீந்தரன் துரைசாமி. தொலைக்காட்சி மூலம் கோடிக்கணக்கான மக்களை அவர் சென்றடைவதன் மூலம் மக்கள் நீதி மய்யத்திற்கு ப்ள்ஸ் ஆக அமையும் என்றும் இதன் மூலம் அவருடைய கட்சி மேலும் பலமடையும் என்பது தனது கருத்து எனவும் ரவீந்தரன் துரைசாமி கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications