மல்லை சத்யா திமுகவுக்கு சப்போர்ட்.. மதுராந்தகத்தில் பரந்தாமன் வெற்றி கன்பார்ம்? அடித்து சொல்லிட்டாரே
சென்னை: மல்லை சத்யா, திமுகவுக்கு ஆதரவு தந்துள்ளார்.. "மதுராந்தகத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலைமையில்தான் மக்கள் இதுவரை இருந்திருக்கிறார்கள்.. இப்போதும் அப்படித்தான் உள்ளனர்.. அதுமட்டுமல்ல, இப்போது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவர் மீது அதிருப்தி உள்ளது.. வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருப்பவர் மீது மிகப்பெரிய எதிர்ப்பு அலை வீசிக்கொண்டிருக்கிறது. எனவே திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள பரந்தாமன் மகத்தான வெற்றி பெறுவார்" என்றும் மல்லை சத்யா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்ததை தொடர்ந்து காலியான இந்த 2 தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

மதுராந்தகம் பரந்தாமன்
இந்த தேர்தலில் திமுக சார்பில் மதுராந்தகத்தில் பரந்தாமனும், தாராபுரத்தில் சுகன்யாவும் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர்களை முதலில் அறிவித்த திமுக, தற்போது கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகளுடன் தேர்தல் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக திராவிட வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பவர் மல்லை சத்யா. இந்த அறிவிப்பு அரசியல் கவனம் பெற்று வருகிறது..
மல்லை சத்யா திமுகவுக்கு ஆதரவு
மல்லை சத்யா ஏற்கனவே மதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தவர். பிறகு அந்த கட்சியில் இருந்து விலகி திராவிட வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தற்போது தவெக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ள நிலையில், மதிமுகவில் இருந்து பிரிந்து வந்த மல்லை சத்யா திமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்களுக்கே மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், அதிமுகவில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனவர்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவுக்கு சென்றது, அதன்பிறகு அதே தொகுதிகளில் இடைத்தேர்தலை சந்திப்பது என இந்த தேர்தல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக திராவிட வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. அந்த கட்சியின் முக்கிய நிர்வாகியும், ஏற்கனவே மதிமுகவில் இருந்து விலகி வந்தவருமான மல்லை சத்யா, அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு இந்த ஆதரவை அறிவித்துள்ளார்.
வேட்பாளர்கள் மீது அதிருப்தி
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒரு இடைத்தேர்தல் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் இயற்கை எய்தினால் அந்த தொகுதியில் நடைபெறும். அல்லது நீதிமன்றத்தால் அந்த எம்.எல்.ஏ. தகுதி இழப்பு செய்யப்பட்டால் இடைத்தேர்தல் வரும். ஆனால், இங்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் வாக்களித்த விரலில் இருந்த மை அழிவதற்கு முன்பாகவே, சுய லாபத்துக்காக தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இதை வாக்காளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மதுராந்தகம் தொகுதியை பொறுத்தவரை, ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலைமையில்தான் மக்கள் இதுவரை இருந்திருக்கிறார்கள்.. இப்போதும் அப்படித்தான் உள்ளனர்.. அதுமட்டுமல்ல, இப்போது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவர் மீது அதிருப்தி உள்ளது.. வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருப்பவர் மீது மிகப்பெரிய எதிர்ப்பு அலை வீசிக்கொண்டிருக்கிறது. எனவே திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள பரந்தாமன் மகத்தான வெற்றி பெறுவார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
திருமாவளவன், இடதுசாரிகள்
சட்டமன்றம் சண்டை மன்றமாக மாறிக்கொண்டிருக்கிறது. முன்னாள் முதல்வர் ஸ்டாலினை பற்றி, முதலமைச்சர் சட்டமன்றத்தில் பேசியதை கூட்டணியிலுள்ள இடதுசாரிகளும், விசிக தலைவர் திருமாவளவனும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள் என்றால், ஜனநாயகத்தின் போக்கு சரியாக இல்லை என்றே அர்த்தம்.. எனவே ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக இன்று திமுகவை சார்ந்த திராவிட வெற்றிக் கழகத்தின் ஆதரவை அளித்துள்ளோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எங்களை சிரித்த முகத்துடன் வரவேற்றார்.
மேலும், ஏற்கனவே இருந்த மதிமுக தற்போது கரைந்து போன கட்சியாக மாறிவிட்டது. தனது மகனுக்காக நிர்வாகிகளை இழந்துள்ளார். இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களையும் இழந்திருக்கிறார்" என்று வைகோவின் பெயரை சொல்லாமல் கூறினார்.
மல்லை சத்யாவின் திமுக ஆதரவு
மல்லை சத்யாவின் இந்த திமுக ஆதரவு அறிவிப்பு கூடுதல் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. காரணம், தவெக கூட்டணியில் தற்போது மதிமுக அங்கம் வகித்து வருகிறது. ஆனால், மதிமுகவில் இருந்து விலகி திராவிட வெற்றிக் கழகத்தில் இணைந்த மல்லை சத்யா, அதே தவெக கூட்டணிக்கு எதிரான நிலையில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
அதேபோல், அதிமுகவில் இருந்து பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தவர்களுக்கே மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதும் இந்த தேர்தலின் முக்கிய அரசியல் பின்னணியாக உள்ளது.


Click it and Unblock the Notifications
