சென்னை மகளிர் விடுதியில் சிக்கிய கஞ்சா.. திருதிருவென முழித்த ஐடி பெண்.. பாய் ஃபிரண்டால் வந்த வினை
சென்னை: சென்னை சூளைமேடு பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஐடி நிறுவன பெண் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். அந்த கஞ்சாவை கொடுத்ததாக அவரது ஆண் நண்பரான கால் டேக்சி டிரைவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சூளைமேடு சக்திநகர் பகுதியில் தனியார் அடுக்குமாடி குடியிப்பு உள்ளது. இதில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்கள் பலர் தங்கி இருக்கின்றனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் சந்தேகம்படும் படி மர்ம நபர் அடிக்கடி வந்து செல்வதாக தெரிகிறது. இந்த நிலையில் ஒரு நாள் அக்கம்பக்கத்தினர் இது தொடர்பாக சூளைமேடு போலீசில் புகார் அளித்தனர்.

இதன் பேரில் போலீசார் அப்பகுதியில் ரகசியமாக கண்காணித்து வந்தனர். மேலும் அப்பகுதி அருகே உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வந்தனர். இதில் அங்கு மர்ம நபர் யாரோ வந்து செல்வது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த தனியார் விடுதியில் குடியிருப்பு உரிமையாளரிடம் உரிய அனுமதி பெற்று சோதனை நடத்தினர்.
இதில், இளம் பெண் வைத்திருந்த பார்சலில் கஞ்சா வாசனை வந்துள்ளது. இதையடுத்து அந்த பார்சலை பிரித்து பார்த்த போது, அந்த பார்சலுக்குள் அசாம் மாநில செய்தி பேப்பர் சுற்றப்பட்ட நிலையில், முழு இலையுடன் கூடிய முதல் ரக அசாம் கஞ்சா இருந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த அறையில் இருந்த பெண்ணிடம் இது பற்றி கேட்டனர்.
அந்த இளம் பெண் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறவே, தொடர்ந்து இளம்பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில், அந்த பெண் புதுக்கோட்டையைச் சேர்ந்த சர்மிளா (25) என்பது தெரிய வந்தது. எம்பிஏ முடித்துள்ள அவர், சோழிங்கநல்லூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. ஷர்மிளா கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் ஐடி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார்.
முன்னதாக ஷர்மிளாவின் தாய் மருத்துவ சிகிச்சையில் இருந்த சமயத்தில் அவருக்கு கால் டேக்சி டிரைவர் சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். தொடர்ந்து ஷர்மிளா பெங்களூர் சென்ற போது சுரேஷும் பெங்களூர் சென்றிருக்கிறார். இந்த நிலையில் தான் ஷர்மிளா சென்னை வந்ததும் அவரை பார்ப்பதற்காக சுரேஷ் அடிக்கடி இந்த தனியார் விடுதிக்கு வந்துள்ளார்.
அப்போது சுரேஷ் தன்னிடம் ஒரு பார்சலை கொடுத்துவிட்டு அதை பின்னர் வாங்கிக்கொள்வதாக கூறிவிட்டு சென்றதாகவும், அந்த பார்சல் தான் இது என்றும் ஷர்மிளா போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் இந்த பார்சலுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்றும் தெரிவித்தார். இதையடுத்து ஷர்மிளா கொடுத்த தகவலை வைத்து கால் டேக்சி டிரைவர் சுரேசை அதிரடியாக கைது செய்தனர்.
தற்போது சுரேஷிடம் விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், அசாமில் இருந்து கஞ்சா எப்படி கிடைத்தது என்றும், எத்தனை ஆண்டுகளாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகிறார் என்றும், கஞ்சா கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்றும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications