வடிவேல் போல் சாம்பிராணி புகை போடும் மாறுவேடம்! 21 ஆண்டு தலைமறைவு கொலையாளி! SIR-ஆல் சிக்கியது எப்படி?
சென்னை: சென்னை எண்ணூரில் 21 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு சாம்பிராணி புகை போடுபவர் போல் சுற்றித் திரிந்த ராஜேந்திரன் என்கிற ரஃபீக்கை, எஸ்ஐஆர் அதிகாரி போல் மாறுவேடத்தில் சென்று தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.
2004 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதி, சென்னை எண்ணூர் காவல் நிலைய ஆய்வாளரிடம் மரியம் பீவி என்பவர் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில், நான் பெரியமேட்டில் வசித்து வருகிறேன். ராஜேந்திரன் என்கிற ரஃபீக், அவரது மனைவி ரசூல் பீவி இருவரும் இந்திரா நகர் 3ஆவது தெருவில் உள்ள எனக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார்கள்.

அப்போது தாஜூதீன் என்பவருடன் மது குடித்துக் கொண்டிருந்த போது அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டதாகவும் மனைவி ரசூலை பார்த்துக் கொள்ளும்படியும் கூறிவிட்டு ராஜேந்திரன் தப்பி விட்டார்.
அவர் ஏதோ குடிபோதையில் என்னிடம் உளருவதாக நினைத்தேன். ஆனால் அவர் வசித்த வீட்டிற்கு போய் பார்த்த போது அழுகிய நாற்றம் வந்தது. இதையடுத்து கதவின் பூட்டை உடைத்து பார்த்த போது தாஜூதீன் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார் என போலீஸாரிடம் தெரிவித்திருந்தாராம்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் ரத்த வெள்ளத்தில் கிடந்த தாஜூதீனின் உடலை கைப்பற்றி பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து எண்ணூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தலைமறைவான ராஜேந்திரனை தேடி வந்தனர்.
போலீஸாரின் விசாரணையில் ராஜேந்திரன் பாலியல் புரோக்கராகவும் இருந்ததாக தெரிகிறது. பரமசிவனின் மகனான ராஜேந்திரனுக்கு லட்சுமி என்ற மனைவி இருந்தார். ஆனால் ரசூல் பீவி என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்ட நிலையில் அவருக்காகவே தனது பெயரை ரஃபீக் என மாற்றிக் கொண்டார்.
மேலும் விசாரணையில் தனது பழக்கமான தாஜூதீனிடம் பிரச்சனை தொடர்பாக பேசிவிட்டு இருவரும் வீட்டில் மது அருந்திய போது ராஜேந்திரனின் இரண்டாவது மனைவி ரஃபீக் பற்றி தாஜூதீன் தவறாக பேசியதால் ராஜேந்திரனுக்கு ஆத்திரம் வந்தது. இதனால் வாக்குவாதம் முற்றிய நிலையில் தாஜூதீனின் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு அவர் அங்கிருந்து தப்பியதும் தெரியவந்தது.
21 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்த ராஜேந்திரன் என்பவரை கைது செய்ய ஆவடி மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து எண்ணூர் காவல் ஆய்வாளர் வீரக்குமார் தலைமையில் இரு தனிப்படைகள் அமைத்து ராஜேந்திரனை தேடி வந்தனர்.
ராஜேந்திரன் கடலூர் மாவட்டம் ஆக்கூர் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர் என தெரியவந்தது. இதனால் ராஜேந்திரன் அங்கு பதுங்கியிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். இதனால் கடலூர் மாவட்டத்தில் ராஜேந்திரன், தந்தை பெயர் பரமசிவன் கொண்ட வாக்காளர் பட்டியலை போலீஸார் தேடினர்.
அப்போது 8 பேர் அதே பெயரில் உள்ளதை போலீஸார் கண்டறிந்தனர். ராஜேந்திரனின் புகைப்படமும் இல்லாமல் அவருடைய பெயர், தந்தையின் பெயரை வைத்துக் கொண்டு போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு வீட்டிற்கும் தேர்தல் விண்ணப்பம் கொடுக்கும் SIR அதிகாரி போல் போலீஸார் சென்றனர். அங்கு எஸ்ஐஆர் படிவத்தை வைத்து தகவல்களை சேகரித்தனர். அப்போது ராஜேந்திரனின் வீட்டிற்கு சென்ற அவர்கள் எஸ்ஐஆர் தொடர்பான விவரங்களை போலீஸார் மாறுவேடத்தில் கேட்டுள்ளனர்.
எஸ்ஐஆர் படிவத்திற்கு தற்போது எடுத்த புகைப்படம் தேவை என கேட்டுள்ளனர். அப்போது ராஜேந்திரன் தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரித்தனர். குறிப்பாக 2002 ஆம் ஆண்டு எங்கு வசித்தார், எந்த வாக்குச் சாவடியில் வாக்களித்தார் போன்ற விவரங்களை எஸ்ஐஆர் அதிகாரி வேடத்தில் இருந்த போலீஸார் சேகரித்துள்ளனர்.
அப்போது அந்த ராஜேந்திரன்தான் எண்ணூர் பகுதியில் வசித்து வந்தவர் என்பதும் அவர்தான் தலைமறைவு குற்றவாளி என்பதையும் தெரிந்து கொண்டனர். அவர் குறித்து விசாரித்த போது ரஃபீக் என்ற பெயரில் கடைகளுக்கு சென்று சாம்பிராணி புகை போட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
ஒரே இடத்தில் இருந்தால் சிக்கிவிடுவோம் என அஞ்சிய ராஜேந்திரன், அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, பெரம்பலூர், பெங்களூர் ஆகிய ஊர்களில் சாம்பிராணி புகைப்போட்டு தலைமறைவாக இருந்தது தெரியவந்தது.
அவரது மகன் பெட்ரோல் பங்கில் வேலை செய்வதை அறிந்த போலீஸார், அவரை வைத்து ராஜேந்திரனை பிடிக்க திட்டமிட்டிருந்தனர். ராஜேந்திரனின் மகனிடம் எந்த உண்மையையும் சொல்லாமல், தந்தை கடையில் சண்டையிட்டதாக கூறி மகனை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
மகனை வைத்து ராஜேந்திரனை போலீஸார் தொடர்பு கொள்ள வைத்து, அவரது செல்போன் டவரின் இடத்தை போலீஸார் தேடினர். இந்த நிலையில் அவர் பெங்களூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பெங்களூர் மாண்டிவாலா மார்க்கெட்டில் தனிப்படை போலீஸார் மாறுவேடத்தில் சென்று ராஜேந்திரனை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications