“தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் பாவம்.. அவர் உதயநிதி மாதிரியா பேசுனாரு?” - மாணிக்கம் தாகூர் சப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாவம். அவர் இல்லை என்று மறுக்கும்போது, அவர் தவறு செய்துவிட்டதாகவே முடிவு செய்து பேசுவது சரியல்ல" என குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும், மக்களவை உறுப்பினருமான மாணிக்கம் தாகூர் பேசியுள்ளார்.

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும், தவெக எம்.எல்.ஏவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Manickam Tagore Defends TVK MLA Arul Vignesh Amid Controversy

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூரிடம் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த மாணிக்கம் தாகூர், "வாட்ஸ் அப் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். வாட்ஸ் அப்பில் பொய்யாக பரப்பப்படும் செய்தியை அனைவரையும் பகிர்ந்து மீடியா விசாரணை எல்லாம் நடக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த முதல்முறை எம்.எல்.ஏ.வான அவர், செய்தியாளர்கள் சந்திப்பில் பாவமாக எனது போனை பாருங்கள், சிசிடிவி-யை பாருங்கள் எனக் கூறுகிறார்.

அவர் மீது மீடியா விசாரணை நடத்துவது நியாயமாக இல்லை. இதுதொடர்பான குற்றச்சாட்டை எம்.எல்.ஏ மறுத்துள்ளார். தவறு நடந்திருந்தால் விசாரிக்கலாம். ஆனால், தவறே நடக்காமல் வாட்ஸ் அப் செய்தியை வைத்து குற்றச்சாட்டு எழுப்பப்படுகிறது. எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட இதற்கு எதிர்வினையாற்றிவிட்டார்கள்.

உங்களைப் பற்றி யாராவது வாட்ஸ்அப்பில் ஏதாவது தகவலைப் பரப்பினால், அதற்கு நீங்கள்தானே பதில் சொல்ல வேண்டும்? சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரே விளக்கம் அளித்துவிட்டார். அப்படி இருக்கும்போது அவரை ஏற்கெனவே குற்றவாளியாக முடிவு செய்துவிட்டதைப் போல பேசுவது எந்த வகையில் நியாயம்? மீண்டும் இதைப் பற்றி பேசுவது நியாயம் கிடையாது.

ஒரு வாட்ஸ் அப் செய்தி வந்துவிட்டது என்பதற்காக எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டுமா? யார் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்? யார் புகார் கொடுத்திருக்கிறார்கள்? யாரை நீங்கள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருக்கிறீர்கள்? சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ விளக்கம் அளித்த பிறகும் அவரைக் குற்றவாளியைப் போலச் சித்தரிப்பதுதான் ஊடக விசாரணை

உதயநிதி ஸ்டாலின் பேசுனது அயோக்கியதனமான, அருவருப்பான பேச்சு. ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அந்தக் காட்சிகள் இருக்கின்றன. அதை இன்னொரு முறை போட்டு பாருங்கள். அதுமாதிரி எம்.எல்.ஏ பேசியதற்கு ஆதாரம் இருக்கிறதா?

தஞ்சாவூரில் 2,000 பேருக்கு முன்னால் ஒரு பெண்ணைப் பற்றி உதயநிதி பேசிய பேச்சை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்களை அவ்வளவு இழிவாகவும், அதிகார மமதையுடனும் பேசுவது அருவருக்கத்தக்கது. ஆனால் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அதுபோன்று பேசியதற்கோ, செய்ததற்கோ ஏதாவது சாட்சி இருக்கிறதா? இருந்தால் காட்டுங்கள். ஆதாரத்தைக் கொடுங்கள்.

உதயநிதி பொதுவெளியில் பேசிய பேச்சையும், தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை மறுக்கும் எம்.எல்.ஏ. விவகாரத்தையும் ஒப்பிடுவது அதிர்ச்சியாக இருக்கிறது. இல்லாத ஒன்றையும் இருக்கிற ஒன்றையும் ஒப்பிட்டு பேசுவது தவறானது" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய மாணிக்கம் தாகூர், "மாவட்ட ஆட்சியர் தலைமைச் செயலரிடம் புகார் அளித்ததாகச் சொல்கிறீர்கள். அதற்கான புகார் இருக்கிறதா? எங்கே புகார் அளிக்கப்பட்டுள்ளது? அதைப் பற்றிய தகவல்களைச் செய்தியாக வெளியிடுங்கள்.

மாவட்ட ஆட்சியரும் தலைமைச் செயலாளரும் தினமும் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். மாவட்ட நிர்வாகம் தொடர்பாக அவர்களுக்குள் தகவல் பரிமாற்றம் நடைபெறும். அதை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வர முடியாது.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அளித்த விளக்கத்தை நான் பார்த்தேன். அந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்வதா, வேண்டாமா என்பதை நீங்களும் நானும் முடிவு செய்ய வேண்டும். ஆனால் அவர் தவறு செய்துவிட்டதைப் போல முன்கூட்டியே விசாரணை நடத்தி முடிவெடுப்பது எந்த வகையில் நியாயம் என்பதுதான் என்னுடைய கேள்வி. நான் யாருக்கும் சப்பைக்கட்டு கட்டவில்லை." எனக் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+