மாணிக்கம் தாக்கூர் இப்படி செஞ்சிட்டாரே.. விஜய்யிடம் நெருக்கம் இதுக்குதானா? ராகுல் வரை போன விஷயம்
சென்னை: சென்னை: தவெக - காங்கிரஸ் கூட்டணிக்குள் சலசலப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது போலும்.. ஏனென்றால், விஜய் பிரதமர் வேட்பாளர் என்ற பேச்சு ஒருபக்கம் என்றால், மறுபக்கம் ராகுல் காந்தியை முன்னிறுத்துவதில் காங்கிரஸ் எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்தே அக்கட்சிக்குள் விவாதம் நடந்து வருகிறது. இந்த சூழலில், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர் தொடர்பாக சொந்த கட்சிக்குள்ளேயே எழுந்துள்ள அதிருப்தி குறித்த புதிய எக்ஸ்க்ளூசிவ் தகவல் நமக்கு கிடைத்துள்ளது.
கடந்த வாரம் நாம் ஒரு எக்ஸ்க்ளூசிவ் செய்தி வெளியிட்டிருந்தோம்.. அதாவது விஜய் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதாக தவெக அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வந்த நிலையில், இது காங்கிரஸ் தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.

ராகுல் காந்தி
குறிப்பாக, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத தவெக அரசியலுக்கு காங்கிரஸ் அமைச்சர்கள் உடனடியாக எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர்.. அப்போது கன்னியாகுமரியில் அமைச்சர் ராஜேஷ்குமார், "ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் அமைச்சரவையிலிருந்து விலகுவோம்" என்று ஒரே போடாக போட்டார்.. ஆனால், அவரது பேச்சுக்கு அமைச்சர் விஸ்வநாதன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்..
உடனே ராஜேஷ்குமார் "ராகுலை விட பதவி பெரிதல்ல என்று கறாராக பதிலளித்திருந்தார்.. இதனை கடந்த வாரம் நமக்கு கிடைத்த எக்ஸ்க்ளூசிவ் தகவலில் தெரிவித்திருந்தோம். இப்போது இந்த விவகாரத்தில் அடுத்த கட்டமாக, காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர் தொடர்பாக கதர் கட்சிக்குள்ளேயே ஏற்பட்டுள்ள அதிருப்தி குறித்த புதிய எக்ஸ்க்ளூசிவ் தகவல் மீண்டும் நமக்கு கிடைத்துள்ளது.
முதலமைச்சர் விஜய்
தவெக அரசுக்கு ஆதரவு தந்த கட்சிகளை தவெகவின் கூட்டணி கட்சிகளாக உறுதி செய்வதற்கான இரண்டாம் கட்ட ஆலோசனையை நேற்று ஆதரவு கட்சி தலைவர்களுடன் நடத்தினார் முதலமைச்சர் விஜய்.
இடதுசாரிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்ததுடன், தவெகவுடன் கூட்டணி கட்சியாக இருக்க முடியாது என்பதை தெளிவாக தெரிவித்துவிட்டன. எனவே, மற்றக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசித்து அக்கட்சியை தவெகவின் கூட்டணிக்கட்சியாக உறுதி செய்துகொண்டார் விஜய்.
கூட்டம் முடிந்ததும் கூட்டணிக்கட்சிகளின் தலைவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது, இந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி முன்னிறுத்தப்படுவரா? என்று காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
மாணிக்கம் தாகூர் பதில்
இதற்கு மாணிக்கம் தாகூர், ஆமாம், இல்லை என்றெல்லாம் நேரடியாக பதில் சொல்லாமல், "தேசிய அளவில் இருப்பது இந்தியா கூட்டணி, இது தமிழகத்துக்கான மதசார்பற்ற சமூக நீதி வெற்றிக்கூட்டணி" என்று மேம்போக்காக சொல்லிவிட்டார்.. மற்றபடி, , ராகுல்காந்தியை, விஜய் உள்ளிட்ட இக்கூட்டணியின் தலைவர்கள் ஏற்பார்களா? மாட்டார்களா? என்பதை தெளிவுப்படுத்தவில்லை மாணிக்கம் தாக்கூர்.
அவரது இந்த தெளிவற்ற பதில்தான், தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தற்போது விவாதங்களையும், குழப்பங்களையும் உருவாக்கியிருக்கிறதாம்..
"ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர், அவரை ஏற்றுக்கொள்பவர்களுடன் தான் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வைக்கும்" என்று அழுத்தம் திருத்தமாக மாணிக்கம் தாகூர் சொல்ல வேண்டியதுதானே? தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் இருப்பதும், முதல்வர் விஜய்யிடம் தனிப்பட்ட நெருக்கத்தை அழுத்தமாக உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதாலும் நேக்குப்போக்காக பேட்டி கொடுத்து விடுவதா? காங்கிரசை தவெகவிடம் அடகு வைப்பதா? என்றெல்லாம் சத்தியமூர்த்தி பவனுக்கு வரும் நிர்வாகிகள் கோபமாக பேசிக் கொள்கிறார்களாம்.
காங்கிரஸில் புகைச்சல்
அதுமட்டுமல்லாமல், மாணிக்கம் தாக்கூரின் செயல்பாடுகள் குறித்து கட்சி மேலிடத்துக்கும் புகார்களை அனுப்பி வருகிறார்களாம்.. குறிப்பாக, "ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள வைக்கும் எந்த நடவடிக்கையையும் மாணிக்கம் தாக்கூர் எடுப்பதில்லை. விஜய்யிடம் நெருக்கம் பாராட்டுவதில் தான் அவரின் கவனம் முழுமையாக இருக்கிறது. இத்தகைய போக்குகளை வளர விட்டால், காங்கிரசை கறிவேப்பிலை மாதிரி தான் விஜய் பயன்படுத்துவார். அதனால், இது குறித்து இப்போதே மாணிக்கம் தாக்கூரிடம் விசாரணை நடத்துங்கள். போதுமான அறிவுரை வழங்குங்கள்" என்று அந்த புகாரில் தெரிவித்திருக்கிறார்களாம்.
மாணிக்கம் தாக்கூர் பலே
ஆனால், மாணிக்கம் தாக்கூர் தரப்பில் இதுகுறித்து விசாரித்தபோது, "பிரதமர் வேட்பாளர் குறித்து காண்ட்ராவெர்சியான இடங்களில் கேள்வி வந்தால், அதனை கடந்து சென்று விடுங்கள்" என டெல்லியே அறிவுறுத்தியிருக்கிறது. அதனால்தான், இந்த பிரச்சனையை எந்த இடத்தில், எந்த நேரத்தில், எப்படி பேச வேண்டும் என மாணிக்கம் தாக்கூருக்கு நன்றாகவே தெரியும்" என்கிறார்கள்.
மாணிக்கம் தாக்கூரின் இந்த அணுகுமுறை, கூட்டணியில் அடுத்தகட்ட சலசலப்பை ஏற்படுத்துமா என்பதே அரசியல் வட்டாரத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது... மேலும், ராகுல் காந்தி விவகாரத்தில் காங்கிரஸ் எடுக்கப்போகும் அடுத்த நிலைப்பாடு.. தவெக - காங்கிரஸ் உறவில் முக்கிய திருப்பமாகவும் அமையலாம்.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
- நமது சிறப்பு நிருபர் எழில்


Click it and Unblock the Notifications
