ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தமிமுன் அன்சாரி என்ட்ரி.. திமுக வேட்பாளருக்காக களத்தில் இறங்கும் மஜக!
சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தரும் என அக்கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 8 ஆம் தேதியும் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது.

முதல் நாளில் 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில், இன்று 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை மொத்தமாக 10 பேர் வேட்பு மனு தாக்கல் செய்து உள்ளனர். நாளை முதல் பொங்கல் விடுமுறை என்பதால் இனி ஜனவரி 17 ஆம் தேதி ஒரு நாள் தான் வேட்பு மனு தாக்கல் செய்யமுடியும். திமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் அன்று வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடைத்தேர்தலில் திமுக போட்டி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக, தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. ஆளுங்கட்சி அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் எனத் தெரிவித்து தேர்தலை புறக்கணித்துள்ளன. பொங்கல் நாளன்று வேட்பாளரை அறிவிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இதனால் ஈரோடு கிழக்கு தேர்தல் களம் திமுக vs நாதக இடையேயான நேரடி போட்டியாக மாறியுள்ளது. இந்நிலையில் இந்த இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபடப்போவதாக தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி தெரிவித்துள்ளது.
தமிமுன் அன்சாரி
முன்னதாக நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கூறுகையில், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு முழுமையான ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். திமுக வேட்பாளரை வெற்றி பெற செய்ய களப்பணியாற்ற உள்ளோம். இதற்காக கட்சியின் இணை செயலாளர் சையது முகம்மது பாரூக் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைத்துள்ளோம்.
இடைத்தேர்தல் சரியாக, முறையாக நடக்காது என எடப்பாடி பழனிச்சாமி கூறுவதன் மூலம் அவர் தேர்தல் ஆணையத்தை அவமதித்துள்ளார். ஒரு அரசியல் கட்சி குறிப்பாக எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய ஒரு கட்சி களத்தில் நின்று மக்களின் உணர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். வெற்றி தோல்வி என்பது இரண்டாவது பட்சம். ஜனநாயகத்தில் சமநிலை இருக்க வேண்டும் என்றால் ஒரு எதிர்க்கட்சி களத்தில் நிற்க வேண்டும். அவர்கள் பின்வாங்கி இருப்பதன் மூலமாக மோசமான தோல்வியை ஒப்புக்கொண்டு உள்ளார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணிக்கு ஆதரவு
கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் தமிமுன் அன்சாரி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டார். அதைத்தொடர்ந்து, அதிமுகவுக்கு ஆதரவாக பேசி வந்த தமிமுன் அன்சாரி, கடந்த லோக்சபா தேர்தலின்போது, திமுக கூட்டணிக்கு ஆதரவளிக்கும் முடிவை எடுத்தார். தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு சீட் ஒதுக்கப்படாத நிலையில் அக்கட்சி திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றியது.












Click it and Unblock the Notifications