ஆழ்வார்பேட்டை டூ தேனாம்பேட்டை..அறிவாலயத்துக்கு வண்டியை விட்ட ஆண்டவர்! கல்தா கொடுக்கும் மநீம தலைகள்.!
சென்னை: கமல்ஹாசனின் மாற்று அரசியல் என்ற முழக்கத்தை நம்பி கட்சிக்குள் வந்து தற்போது கூட்டணி அரசியலால் ஆத்திரத்தில் இருக்கும் மேலும் பல தலைவர்கள் கட்சியிலிருந்து கிளம்ப முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக நடிகர் ஒருவரின் மனைவியும், கட்சியில் தற்போது தலைமைக்கு இணையாக இருக்கும் பிரபல நடிகையும் அந்த கட்சியில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது.
ராகுல் காந்தியுடனான சந்திப்புக்கு பிறகு மிகுந்த உற்சாகத்துடன் காணப்படும் கமல்ஹாசன் தேசிய அளவில் அரசியல் கவனிக்கப்படும் நபராக மாறியுள்ளார். குறிப்பாக ராகுல்காந்தியுடனான அவரது உரையாடல் உள்ளூர் முதல் டெல்லி வரை கவனம் பெற்றது.

களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய அவரது திரை பயணம், நடன உதவியாளர், நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா என பல்வேறு பரிணாமங்களை தாண்டி தற்போது அரசியக்வாதியாகவும் பயணித்து வருகிறது.
ஆழ்வார்பேட்டை ஆண்டவர்: 5 தலைமுறைகளை தாண்டி இன்னும் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் ஆண்டவர். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அரசியல் எனும் மேக்கப் போட்டார் கமல்ஹாசன். சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக கட்சியை ஆரம்பித்து சில தேர்தல்களில் போட்டியிட்டு இருந்தாலும் 2021 சட்டமன்ற தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது மக்கள் நீதி மய்யம். சில தொகுதிகளில் கௌரவமான ஓட்டுக்களை பெற்றாலும், கட்சியின் தலைவரான கமல்ஹாசன் கோவையில் பாஜகவிடம் வீழ்ந்தார்.
தொண்டர்கள் சோர்வு: இதை அடுத்து ஊரக உள்ளாட்சித் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களிலும் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் கூட வெற்றி பெற்ற நிலையில் மக்கள் நீதி மைய வேட்பாளர்கள் குறிப்பிட தகுந்த அளவு வெற்றியைப் பெறவில்லை. அதற்கு அடுத்த நாட்களிலும் தீவிர அரசியலில் ஈடுபடாத கமல் விக்ரம், பிக் பாஸ் உள்ளிட்ட தான் சார்ந்த நிகழ்வுகளில் கவனம் செலுத்தி வருகிறார். இதனால் அறிக்கை, ட்விட்டர் அரசியலோடு நின்று விட்டது அக்கட்சி. தொண்டர்களை சந்திப்பது பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் என அரசியலுக்கு களத்திற்கு தேவையான எதையும் கமல்ஹாசன் மேற்கொள்ளாததால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர்.
காங்கிரஸுடன் நெருக்கம்: கீழ்மட்ட நிர்வாகிகள் கட்சியில் இருக்கிறோம் என்பது கூட தெரியாமல் இருக்கும் நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என குழம்பிப் போயிருக்கின்றனர். இந்நிலையில் கூட்டணி கட்சிகள் குறித்து விமர்சித்து வந்த கமல்ஹாசன் கூட்டணி அரசியலுக்குள் கால் எடுத்து வைத்திருக்கிறார் கமல்ஹாசன். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டதோடு அவருடைய தனிப்பட்ட உரையாடல் குழுவிலும் கமல்ஹாசன் இடம் பெற்றார். இதையடுத்து காங்கிரஸ் உடன் நெருக்கம் காட்டிய அவர் அதை வைத்து திமுக கூட்டணியிலும் இணைந்துள்ளார்.
கூட்டணி நிர்வாகிகள்: இதற்கு முன்னதாக வலதும் இல்லை இடதும் இல்லை மையமே மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை என பேசி வந்த கமல்ஹாசன் மாற்று அரசியல் என்ற வாதத்தை முன் வைத்தார். இதனால் படித்த இளைஞர்கள் மேல்தட்டு வர்க்கத்தினரின் ஆதரவு கமல்ஹாசனுக்கு இருந்தது. அதனால்தான் கோயமுத்தூரில் பாஜகவின் வானதி சீனிவாசனுக்கு இணையான வாக்கு வங்கியை கமல்ஹாசனால் பெற முடிந்தது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல மற்ற அரசியல்வாதிகள் போலவே கமல்ஹாசனும் கூட்டணி இணைந்து இருப்பது மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது.
கட்சி தாவும் தலைவர்கள்: இதற்கு முன்னதாக கமலஹாசனின் கொள்கைகள் பிடிக்காமல் அல்லது கட்சியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் காரணமாக பலரும் அந்த கட்சியில் இருந்து விலகி மாற்றுக் கட்சிகளில் இணைய தொடங்கினர். அந்த வகையில் பத்மபிரியா, மகேந்திரன், அனுஷா ரவி உள்ளிட்ட பலரும் கட்சியில் ஜனநாயகம் இல்லை உள் அரசியல் நடக்கிறது என குற்றம் சாட்டி கட்சியில் இருந்து வெளியேறினர். நேற்று கூட கட்சியின் மாணவர் அணி தலைவராக இருந்த சங்கர் ரவி கட்சியில் ஜனநாயகம் இல்லை .. கட்சிக்காக உழைத்தவர்களுக்கு மரியாதை இல்லை வருங்காலத்திலாவது இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா எனக் கூறிய கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார்.
தேசிய கட்சியில் ஐக்கியம்: இந்த நிலையில் கமல்ஹாசனின் மாற்று அரசியல் என்ற முழக்கத்தை நம்பி கட்சிக்குள் வந்து தற்போது கூட்டணி அரசியலால் ஆத்திரத்தில் இருக்கும் மேலும் பல தலைவர்கள் கட்சியிலிருந்து கிளம்ப முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக நடிகர் ஒருவரின் மனைவியும், கட்சியில் தற்போது தலைமைக்கு இணையாக இருக்கும் பிரபல நடிகையும் அந்த கட்சியில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அவர்கள் ஒரு தேசிய கட்சியில் இணையவுள்ளதாகவும் இதற்காக மாநில தலைமை டெல்லி தலைமையிடம் தேதி கேட்டிருப்பதாகவும். அதன் பின்னர் கட்சியில் அவர்களது இணைப்பு இருக்கும் எனக் கூறுகிறார்கள். மக்கள் நீதி மையத்திலிருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் வெளியே வருவது அந்த கட்சி மூத்த முன்னோடிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும் இந்த அதிர்ச்சி இன்னும் பல மாதங்களுக்கு தொடரலாம் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications