மெரினா புரட்சி , இலங்கை புரட்சி, வங்கதேச புரட்சி வரை.. ஆளும் அரசுகள் கற்க வேண்டிய பாடங்கள்
சென்னை: தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டிற்காக நடந்த மெரினா புரட்சி, இடஒதுக்கீடுக்கான மணிப்பூர் கலவரம், இலங்கையில் விலைவாசி உயர்வு காரணமாக அதிபர் ராஜபக்சேவிற்கு எதிராக நடந்த போராட்டம், வேலையில்லாத திண்டாட்டம் காரணமாக வங்கதேசத்தில் நடந்த புரட்சி போன்றவற்றில் ஆளும் அரசுகள் கற்க வேண்டிய பாடங்கள் பற்றி பார்ப்போம்.
பொதுவாக மக்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை சட்டமாக அமல்படுத்தும் போது பிரச்சனைகள் வெடிக்கின்றன. குறிப்பாக ஒரு பிரச்சனைக்கு காரணமான சட்டங்களை அரசாங்கங்கள் போட்டுவிட்டு, பின்னாளில் நீதிமன்றங்கள் உத்தரவிட்டதால் அமல்படுத்துகிறோம் என்று கூறும் போது தான் பிரச்சனைகள் வெடிக்கின்றன.

சென்னையில் நடந்த மெரினா புரட்சி: தமிழ்நாட்டில் 2017ம் ஆண்டு பொங்கல் சமயத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றமும் சட்டத்தை காரணம் காட்டி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கவில்லை. இதனால் அப்போது அரசுகளோ ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதையடுத்து கொதித்து போன தமிழ்நாட்டு மக்கள் புரட்சியில் குதித்தனர்.மெரினாவில் மொத்தமாக ஒன்று கூடினார்கள். மெரினாவில் சில 100 ஆக இருந்த மக்கள் எண்ணிக்கை, லட்சத்தை தாண்டியது.
மெரினா மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதுமே எல்லா ஊர்களிலும் உள்ள மைதானங்களில் போய் மக்கள் அமர்ந்து ஜல்லிக்கட்டுக்காக போராடினார்கள். தடை அதை உடை என்று வெடித்த அந்த புரட்சி காரணமாக வேறு வழியின்றி தமிழகத்தில் சிறப்பு சட்டசபை கூட்டத்தொடர் நடத்தப்பட்டது . அந்த கூட்டத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான சிறப்பு சட்டமசோதா நிறைவேறியது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். அதன்பின்னரே போராட்டம் முடிவுக்கு வந்தது.
மணிப்பூர் பிரச்சனை : இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் , இம்பால் பள்ளத்தாக்கில் வசிக்கும் பெரும்பான்மையான மெய்தேயி மக்களுக்கும் மற்றும் சுற்றியுள்ள மலைகளைச் சேர்ந்த குகி-ஜோ பழங்குடி சமூகத்திற்கும் இடையே இடஒதுக்கீடு தொடர்பான சர்ச்சை காரணமாக கலவரம் வெடித்தது. பட்டியல் பழங்குடி (எஸ்டி) பிரிவில் மெய்தேயி சமூகத்தை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நான்கு வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றம் ஏப்ரல் 19 ஆம் தேதியன்று மாநில அரசுக்கு உத்தரவிட்டது. மத்திய அரசின் பரிசீலனைக்கும் இதை அனுப்புமாறு நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருந்தது.
இந்த தீர்ப்பு தான் கலவரத்திற்கு காரணமான மையப்புள்ளியாக பார்க்கப்படுகிறது. மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்து ஏராளமானோர் கொல்லப்பட்ட நிலையில், மணிப்பூர் உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பை வாபஸ் பெற்றது. எனினும் இன்னும் அங்கு பதற்றமான நிலையே நீடிக்கிறது. இருசமூக மக்களுமே கொந்தளிப்பில் உள்ளனர்.
இலங்கை அதிபருக்கு எதிரான புரட்சி: இலங்கையில் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிராக 2022ம் ஆண்டு புரட்சி வெடித்தது. தாங்க முடியாத அளவிற்கு விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கொதித்து போய் போராடினார்கள்.. இதனால் ஒரு கட்டத்தில் கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவி விலகியதுடன், மாளிகையை விட்டு வெளியேறி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தார். அவரது அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் சூறையாடினார்கள். இப்போது அதேபோன்ற சம்பவம் தான் வங்கதேசத்தில் நடந்துள்ளது.
வங்கதேச புரட்சி: வங்கதேசத்தில் வேலையில்லா திண்டாட்டம் உச்சகட்டமாக உள்ள நிலையில், அங்கு விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற ராணுவ வீரர்களின் 3ம் தலைமுறை வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு அளித்த உயர்நீதிமன்ற தீர்ப்பு புரட்சிக்கு காரணமாக அமைந்தது. உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அந்த நாட்டு அரசு இடஒதுக்கீடு அறிவித்ததால், போராட்டம் உச்சகட்டம் அடைந்து, பிரதமர் ஷேக் ஹசினா இல்லத்தை இன்று கலவரக்காரர்கள் சூறையாடி உள்ளார்கள். வங்கதேசத்தை உருவாக்கிய ஷேக் முஜிபுர் ரகுமான் சிலையும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கில் மெரினா, மணிப்பூர் இரண்டும் இந்தியாவில் நடந்தது. இந்தியாவில் நடந்த பிரச்சனைகள் என்பது தனிப்பட்ட உணர்வு மற்றும் மக்களின் விருப்பம் சார்ந்தது.. இங்கு மக்கள் அரசாங்கங்களை எதிர்த்து புரட்சி செய்யவில்லை.. தங்கள் கோரிக்கைக்காகவே புரட்சி செய்தனர். அதை அரசுகள் நிறைவேற்றியதும் பிரச்சனை முடிவுக்கு வந்தது. ஆனால் இலங்கை , வங்கதேசத்தில் அப்படி இல்லை.. முதலில் பிரச்சனை என்று ஆரம்பித்தது. பின்னாளில் ஆட்சியில் உள்ளவர்களுக்கு எதிரான புரட்சியாக மாறியது.
மக்களுக்கு பிடிக்காத விஷயங்களை சட்டமாக்க யார் முயன்றாலும் புரட்சி வெடிக்கும் என்பதே எதார்த்தம். ராணுவம், போலீஸ்,ஆளும் கட்சி நம்மை எதிர்க்க யாரால் முடியும் என்று அதிகாரத்தில் இருக்கும் போது, மக்களுக்கு பிடிக்காத விஷயங்களை செய்தாலோ அல்லது மக்களின் அடிப்படை பிரச்சனைகளை புரிந்து கொள்ள மறுத்தாலே அங்கு புரட்சி வெடிக்கிறது. அப்படித்தான் இலங்கையிலும் இப்போது வங்கதேசத்திலும் நடந்துள்ளது..












Click it and Unblock the Notifications