2 தலைகளுக்கு முக்கிய பொறுப்பு.. ‘புரமோஷன்’.. தனக்காக களமாடும் நிர்வாகிகளுக்கு பதவி.. ஓபிஎஸ் ஆக்ஷன்!
சென்னை : மருது அழகுராஜ் மற்றும் புகழேந்தி ஆகியோரை கொள்கை பரப்பு செயலாளர்களாக நியமித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.
அதிமுகவில் ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையேயான மோதல் காரணமாக இரு தரப்பினரும் தனித்தனி அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். இரு தரப்பினரும் எதிர் தரப்பைச் சேர்ந்தவர்களை கட்சியை விட்டு நீக்கி புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளனர்.
ஏற்கனவே தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களை இரு அணியும் நியமித்த நிலையில், தற்போது கொள்கை பரப்புச் செயலாளர்களாக, புகழேந்தி, மருது அழகுராஜ் ஆகியோரை நியமித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
மேலும், புதிதாக அமைப்பு செயலாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவு இணை செயலாளர்களையும் நியமித்து அறிவித்துள்ளார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ் - ஈபிஎஸ் மோதல்
அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே உட்கட்சி பூசல் நீடித்து வரும் நிலையில், கட்சியைக் கைப்பற்றுவதில் இருவருமே தீவிரம் காட்டி வருகின்றனர். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தில் முடிவைப் பொறுத்து தான் அதிமுக யார் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பது தெரியவரும். பொதுக்குழுவை நடத்தி எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார்.

புகழேந்தி - மருது அழகுராஜ்
அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம், தான் தான் ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை கட்சியை விட்டு நீக்கினார். இரு தரப்புமே, தனித்தனியாக புதிதாக நிர்வாகிகளையும் நியமித்துள்ளனர். அந்த வகையில், தற்போது அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர்களாக மருது அழகுராஜ் மற்றும் புகழேந்தி ஆகியோரை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

அமைப்புச் செயலாளர்கள் நியமனம்
மேலும், புதிதாக அமைப்பு செயலாளர்கள் மற்றும் பல்வேறு சார்பு அணிகளின் இணை செயலாளர்களையும் ஓபிஎஸ் நியமித்துள்ளார்.
1. மு.கவிதா இராசேந்திரன் முன்னாள் தலைவர், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி) கழக அமைப்புச் செயலாளர்
2. எஸ்.டி.காமராஜ் (திருநெல்வேலி மாவட்டம்) கழக அமைப்புச் செயலாளர்.
3. பி.வி.கே பிரபு (நாகப்பட்டினம் மாவட்டம்) கழக அமைப்புச் செயலாளர்
4. பி.எச்.சாகுல் அமீது (கரூர் மாவட்டம்) கழக அமைப்புச் செயலாளர்
5. ஜெ. கோசுமணி (சென்னை மாவட்டம்) கழக மீனவரணிச் செயலாளர்
6. வி.ஆர்.ராஜ்மோகன் (மதுரை மாவட்டம்) கழக இளைஞரணிச் செயலாளர்

சார்பு அணிகளின் நிர்வாகிகள்
7. ஜி.மோகன், அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர்
8. துறையூர் கே.கணேஷ் பாண்டியன் (தூத்துக்குடி மாவட்டம்) கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளர்
9. ஏ.சி.லோகு (சென்னை மாவட்டம்) கழக மீனவரணி இணைச் செயலாளர்
10. ஜி.ஜெயராமன் (விழுப்புரம் மாவட்டம்) கழக மீனவரணி துணைச் செயலாளர் ஆகியோரையும் நியமித்துள்ளார் ஓபிஎஸ். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு உடன் பிறப்புகளை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பெங்களூர் புகழேந்தி
அதிமுகவின் கர்நாடக மாநில செயலாளராக பொறுப்பு வகித்தவர் பெங்களூரு வா.புகழேந்தி. அதிமுகவின் செய்தி தொடர்பாளராகவும் பணியாற்றினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராக இருந்தார். பெங்களூரில் நடந்த ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கை 10 ஆண்டுகளுக்கு மேலாக கவனித்து வந்தவர் புகழேந்தி தான். அந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் கைதானபோது புகழேந்தியும், அவரது குடும்பத்தினரும் தங்களது சொத்துகளை ஜாமீன் வழங்கி கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது

கட்சியை விட்டு நீக்கம்
அதிமுக செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த புகழேந்தியை கடந்த ஆண்டு ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் கட்சியை விட்டு நீக்கினர். அன்புமணி ராமதாஸ் பற்றி புகழேந்தி பேசியது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் புகழேந்தி கட்சியை விட்டு நீக்கப்பட்டார். இதையடுத்து தன் நற்பெயருக்கு களங்கம் விளைவித்து விட்டதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் மீது வழக்குத் தொடர்ந்தார் புகழேந்தி, அதன்பிறகு அவர் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.

புகழேந்திக்கு முக்கிய பதவி
அதிமுகவில் ஏற்பட்ட ஓபிஎஸ், ஈபிஎஸ் மோதலுக்கு மத்தியில் ஓ.பன்னீர்செல்வத்தின் பக்கம் ஆதரவாக நின்று வருகிறார் புகழேந்தி. ஓ.பன்னீர்செல்வம் தரப்பின் முக்கிய நபராக மாறியிருக்கும் புகழேந்தி, ஓபிஎஸ் நடத்தும் அத்தனை ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்று வருகிறார். பத்திரிகையாளர் சந்திப்புகளிலும், விவாத நிகழ்ச்சிகளிலும் எடப்பாடி பழனிசாமி தரப்பை திணறடித்து வருகிறார். எனினும், ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு முக்கிய பதவி எதையும் அளிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது கொள்கை பரப்புச் செயலாளராக புகழேந்தியை நியமித்துள்ளார் ஓபிஎஸ்.

பதவி
சமீபத்தில் கூட, புகழேந்தி ஒரு பேட்டியின்போது பேசுகையில், ஓபிஎஸ் அணியில் எனக்கு எந்தப் பதவியும் இல்லை, பதவியை எதிர்பார்த்து நான் பேசவில்லை. என்னை நீக்கிய அறிவிப்பில் ஓபிஎஸ்ஸும் தான் கையெழுத்து போட்டார். எடப்பாடி பழனிசாமி நியாயமாக நடந்துகொள்ளவில்லை என்றுதான் அவரை எதிர்க்கிறேன். அவர் கட்சியை அழித்துவிடுவார் எனப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மருது அழகுராஜ்
அதிமுக செய்தித் தொடர்பாளராகவும், நமது அம்மா நாளிதழ் ஆசிரியராகவும் இருந்துவந்த மருது அழகுராஜ், ஈபிஎஸ் - ஓபிஎஸ் மோதலுக்குப் பிறகு தனது பொறுப்பை ராஜினாமா செய்தார். பின்னர் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வந்த மருது அழகுராஜ் அரசியலிலிருந்தே விலகுவதாக சமீபத்தில் அறிவித்தார். பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அழைத்து விசாரித்து, நீங்கள் விலகக்கூடாது எனக் கேட்டுக் கொண்டதையடுத்து, தனது முடிவை வாபஸ் பெற்றார். இந்நிலையில், அவருக்கும் கொள்கை பரப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications