மழை வெள்ள நிவாரணம்; குடும்பம் ஒன்றுக்கு ரூ.5,000 வழங்குக; அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கோரிக்கை..!
சென்னை: தமிழகம் முழுவதும் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5,000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
வெள்ளத்தால் மக்கள் அவதிப்படும் சூழலில் அமைச்சர்களும், முதலமைச்சரும் நேரடியாக களத்தில் இறங்கி நிவாரண நடவடிக்கைகள் எடுப்பது ஆறுதல் அளிப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியிருப்பதாவது,

நிவாரணப் பணிகள்
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமாகியுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லட்சக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்து மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் உட்பட அமைச்சர்கள், அதிகாரிகள் பல்வேறு நிவாரண நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபட்டுள்ளது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

ரூ.5,000 தருக
இருப்பினும் நிவாரண உதவிகள் பல பகுதிகளுக்கு சென்று சேரவில்லை என்ற புகார்கள் உள்ளதை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம். வீடுகளில் தண்ணீர் புகுந்து உடமைகளை இழந்துள்ள குடும்பங்களுக்கு உடனடியாக தலா ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும். பயிர் பாதிப்பு குறித்து உடனடியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்கும் என்ற உறுதியை முதல்-அமைச்சர் விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

நிவாரண உதவி
மறுவிவசாய பணிகளை மேற்கொள்ள தேவையான இடுபொருட்களையும் இலவசமாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும். இவ்வாறு மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அப்போதைய அதிமுக அரசு வங்கிக்கணக்கு மூலம் ரூ.5,000 நிவாரணத் தொகை அளித்தது திரும்பிப்பார்க்கத் தக்கது.

ஓ.பி.எஸ். ரூ.20,000
இதனிடையே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தமிழக அரசு நிவாரணமாக தலா ரூ.20,000 வழங்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்து முழுமையாக ஆராய்ந்த பின்னர் நிவாரணத் தொகை குறித்த முக்கிய அறிவிப்பை தமிழக அரசு வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications