"பூனைக்கு மணி".. திமுக மறக்கல போல.. எகிறியடிக்கும் எடப்பாடி.. லெப்ட்ல போறதா? ரைட்ல போறதா? ஹாட் பாமக
திமுக, அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறக்கூடிய சாத்தியக்கூறுகள் குறைவு என்கிறார்கள்
சென்னை: இந்த முறை இடைத்தேர்தலில் பாமக போட்டியிடவில்லை.. வரப்போகும் சட்டசபையை குறி வைத்து இப்போதே காய்களை நகர்த்தி வருகிறது.. அத்துடன், பாமகவின் எம்பி தேர்தல் வியூகம், கூட்டணி எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது.
கட்சிக்கு அன்புமணி ராமதாஸ் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்தே, பாமக புதுப்பொலிவுடன் மிளிர்ந்து கொண்டிருக்கிறது.. கட்சியின் அஸ்திவாரங்கள் தொடர்ந்து பலப்படுத்தப்பட்டு வருகின்றன..
பாமகவுக்குள் புது ரத்தம் பாய்ச்சப்பட்டு, பல்வேறு அதிரடிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. தமிழக முழுவதும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருகிறார் அன்புமணி ராமதாஸ்..

2.0 ஆக்ஷன்
கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து, பாமகவின் அடித்தளத்தையே மேலும் வலுவாக்கி வருகிறார்.. இதற்காகவே, 2.0 என்ற திட்டத்தையும் கையிலெடுத்து வருவதுடன், 2026ல் பாமக கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பதையும் வெளிப்படையாகவே பறைசாற்றி வருகிறார்.. இப்படிப்பட்ட சூழலில்தான், வன்னியர் சங்க மாநாட்டை நடத்த வேண்டும் என்று பாமக தொண்டர்கள், அன்புமணியிடம் கோரிக்கை வைத்ததாக தெரிகிறது. அந்தவகையில், இந்த ஆண்டு சித்திரை முழு நிலவு திருநாள் நடத்த பாமக திட்டமிட்டு வருவதாக தெரிகிறது..

ஒன்னுமே புரியல
பாமக சார்பில் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிப்படையாக வரவில்லை என்றாலும், சித்திரை முழு நிலவு மாநாடு நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே இருப்பதாக சொல்கிறார்கள்.. அநேகமாக மே 06ம் தேதி மாநாடு நடக்கலாம் என்றும் உத்தேசமாக ஒரு தகவல் கசிந்து வருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு ஒப்புதல் தருமா? தராதா? என்ற சந்தேகமும் ஓடிக் கொண்டிருக்கிறது... இந்தநிலையில்தான், நடக்க போகும் இடைத்தேர்தலில் பாமக யாருக்கும் ஆதரவு இல்லை என்று அறிவித்திருந்தது.. இதற்கும் ஒரு காரணம் சொல்லப்பட்டது. இந்த தொகுதியில் சுமார் 3 சதவீதம் வன்னியர் வாக்குகள் உள்ள நிலையில், அவற்றை தங்கள் பக்கம் திருப்பவே பாமகவை "யாருக்கும் ஆதரவில்லை" என்ற நிலைப்பாட்டை திமுகவே எடுக்க வைத்ததாம்..

பச்சை சிக்னல்
திமுகவில் உள்ள வன்னியர் சமூகத்து சீனியர் அமைச்சர் ஒருவர், இதன் பின்னணியில் இருப்பதாக சொன்னார்கள். அதுமட்டுமல்ல ஈரோடு கிழக்கு காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக இருக்கும்படி முக்கிய நிர்வாகிகளுக்கும் பாமக தரப்பில் சிக்னல் தரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன.. அப்படியானால், எம்பி தேர்தலில் திமுகவுடன் பாமக கூட்டணி வைக்க போகிறதா? அப்படி பாமக உள்ளே நுழைந்தால், விசிக என்ன நிலைப்பாட்டை எடுக்கும்? என்பது போன்ற சந்தேகங்களும் எகிறி கொண்டிருக்கிறது.. இப்போதைக்கு திமுகவுக்குள்ளேயே ஏகப்பட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், அந்த கூட்டணியும் மிகப்பெரிய பலம் வாய்ந்த கூட்டணியாக திகழ்ந்து வருகிறது..

குடைச்சல்
கூட்டணி வைக்க பாமக ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்படும் நிலையில், திமுக இதுகுறித்து எந்த சிக்னலையும் காட்டவில்லை. இதற்கு காரணம், முரசொலி அலுவலக இடத்தின் மூலப்பத்திரத்தை கேட்டு, டாக்டர் ராமதாஸ் தந்த குடைச்சலை திமுக மேலிடம் இன்னும் மறக்கவில்லை என்கிறார்கள்.. அதனாலேயே பாமகவுடனான கூட்டணி விஷயத்தில் தயக்கம் இருப்பதாகவும், இதுகுறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.. அதற்கேற்றார்போல், திருமாவளவனும் நேற்றைய தினம் பேசும்போதும் கூட்டணி குறித்து செய்தியாளர்களிடம் விளக்கி உள்ளார்.

கன்பார்ம்முடு
"வேங்கை வயல் சம்பவத்தை தமிழக அரசு இந்தக் கோணத்திலும் விசாரிக்க வேண்டும், வேங்கைவயல் விவகாரத்தை முன்வைத்து திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேற வேண்டும் என்று சீமான் சொல்லி உள்ளார்.. ஆனால், சமூகப் பிரச்சினைகளுடன், அரசியலை முடிச்சுப் போடத் தேவை இல்லை என்று திருமாவளவன் கூறி, திமுகவுடனான கூட்டணியை மீண்டும் ஒருமுறை கன்பார்ம் செய்திருந்தார்.. அதேபோல, அதிமுகவை இந்த முறை இடைத்தேர்தலில் பாமக கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்.. இதற்கு முன்பு நடந்த இடைத்தேர்தல்களில் அதாவது, பென்னாகரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட பாமக, விக்கிரவண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் அதிமுகவை ஆதரித்தது...

கப்சிப் மோடு
இப்படியெல்லாம் கடந்த காலங்களில் இருந்துவிட்டு தற்போது, "இடைத் தேர்தல் நடத்துவதால் மக்களின் வரிப்பணம் தான் வீண், யாருக்கும் ஆதரவு இல்லை" என்று அறிக்கையும் வெளியிட்டிருந்தது அதிமுகவுக்கே சற்று ஷாக் தானாம்.. அதனாலேயே, அதிமுக மேலிடமும் கடுப்பாகி உள்ளதாம்.. இனிமேல் பாமகவுக்கான கூட்டணி கதவை திறக்க போவதில்லை என்று முக்கிய நிர்வாகிகளிடமே சொல்லி உள்ளதாம் எடப்பாடி தரப்பு.. இப்படி 2 தரப்புமே பாமகவை கூட்டணிக்குள் சேர்ப்பது பற்றி இதுவரை முடிவெடுக்காத நிலையில், களத்தில் வாக்குவங்கியை நிர்ணயிக்கும் அளவுக்கு, பலம்வாய்ந்த பாமக, இனி என்ன செய்ய போகிறது? கூட்டணி மணியை அடிக்க போவது யார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!!!












Click it and Unblock the Notifications