"மாஸ்டர் ஸ்ட்ரோக்".. திமுகவிடம் சிக்கும் "தலை".. டபுள் பிளான் போட்டும் போச்சா எல்லாம்.. அப்ப எடப்பாடி
ஆர்பி உதயகுமார் திமுகவை சீண்டி வருவது கடுப்பை ஏற்படுத்தி உள்ளதாம்
சென்னை: எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள ஆதரவாளர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஓபிஎஸ் டீம் இறங்கி வரும் நிலையில், அதற்கான சாதகமான ரிப்போர்ட்களும் அவருக்கு கிடைத்து கொண்டிருக்கிறதாம்.. அதிலும் மதுரை புள்ளி, விரைவில் தங்கள் பக்கம் வரலாம் என்றும் நம்பிக்கை சொல்கிறார்கள்.
கடந்த சில நாட்களுக்குமுன்பு, எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை எடப்பாடி பழனிசாமி யாருக்கு வழங்க போகிறார் என்ற எதிர்பார்ப்புகள் தினம் தினம் நிலவிகொண்டே இருந்தது..
அப்போதுதான் 2 பேரின் பெயர்கள் பலமாக அடிபட்டன.. ஒருவர் செல்லூர் ராஜு. மற்றொருவர் ஆர் பி உதயகுமார்.. இதற்கு காரணம், தென்மாவட்டம் என்ற அடிப்படையிலும், முக்குலத்தோர் சமூகம் என்ற அடிப்படையிலும் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது..

ஸ்டிராங்
இறுதியில் ஆர்.பி. உதயகுமாரின் பெயரை டிக் அடித்தார் எடப்பாடி பழனிசாமி.. இதற்கு சில காரணங்களும் அப்போதே சொல்லப்பட்டன.. செல்லூர்ராஜைவிட, ஓபிஎஸ்ஸை சமீபகாலமாகவே அதிகம் விமர்சித்து வந்தவர் உதயகுமார்.. ஆரம்பத்தில், ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்தவர்தான் உதயகுமார்.. ஆனால், திடீரென எடப்பாடி பக்கம் ஸ்டிராங் ஆகிவிட்டார்.. நடந்து முடிந்த பொதுக்குழு கூட்டத்திலேயே மேடையிலேயே ஓபிஎஸ்ஸை தாக்கி பேசியதில் அப்பட்டமாக விளங்கியது. எப்படியும் உதயகுமாருக்கு பதவி கிடைக்கும் என்பதை ஓபிஎஸ் டீம் அறிந்ததாலோ என்னவோ, அவர்களும் உதயகுமாரையே டார்கெட் செய்து விமர்சித்து வருகின்றனர்.. அதனால், நேரடியாகவே, ஓபிஎஸ் தரப்பினருக்கு பதிலடி தந்தும் வருகிறார் உதயகுமார்..

சான்ஸ்
இதனால், சாதி சங்கங்களின் எதிர்ப்பையும் உதயகுமார் எதிர்கொள்ளும் நிலைமை வந்துள்ளது என்றாலும், அதை சரிக்கட்டவும் பிளான்களை போட்டு வருகிறார்.. உதயகுமாருக்கு இந்த சான்ஸை எடப்பாடி தருவதற்கு இன்னொரு காரணமும் உண்டு.. நடந்து முடிந்த தேர்தலுக்கு பிறகு, எடப்பாடி மீதான அதிருப்திகள் தென்மண்டலங்களில் கூடிவிட்டன.. ஏற்கனவே வன்னியர் ஒதுக்கீடு விஷயத்தில் அதிருப்தியில் இருந்தவர்கள், ஓபிஎஸ்ஸை ஒரேயடியாக ஒதுக்கிவிட்டதால், இன்னும் அதிருப்திகளை சம்பாதித்து கொண்டுவிட்டார்.

குழம்பிய குட்டை
முக்குலத்தோர் சமுதாய மக்களின் இழந்துபோன ஆதரவை மீட்டெடுக்கவும், ஓபிஎஸ் இந்த விஷயத்தில் நுழைந்து குட்டைய குழப்பி, இருக்கின்ற முக்குலத்தோர் ஆதரவையும் கிடைக்காமல் செய்துவிடுவாரோ என்ற கலக்கத்திலேயே, அதே சமூகத்தை சேர்ந்த உதயகுமாருக்கு போஸ்டிங் தரப்பட்டுள்ளதாகவே சொல்லப்படுகிறது. இப்போது சிக்கல் என்னவென்றால், போஸ்டிங் தந்தபிறகு, ஓபிஎஸ்ஸை அதிகம் தாக்கிக் கொண்டிருக்கும் அதேநேரத்தில், திமுக பக்கமும் பாய்ந்து வருகிறார் உதயகுமார்..

செல்லூர் ராஜு
முன்பெல்லாம் இந்த அளவுக்கு திமுக மீது காட்டம் காட்டியதில்லை.. ஆட்சியை இழந்ததுதே, கப்சிப் மோடுக்கு சென்றுவிட்டார் உதயகுமார்.. செல்லூர் ராஜுவாவது அடிக்கடி திமுகவை ஏதாவது விமர்சித்து கொண்டிருப்பார்.. ஆனால், உதயகுமார் வாய் திறக்காமலேயே இருந்த நிலையில், தற்போது அவரது அதிகாரம் கூடி வருகிறது.. சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரானதில் இருந்து, அவரது பேச்சும் வேறு தினுசாக உள்ளதாக சொல்கிறார்கள்.

இலை + தலை
நேரடியாக ஸ்டாலினை அட்டாக் செய்து, தன்னுடைய அரசியலை ஆரம்பித்துள்ளார்.. ஒற்றை தலைமை விவகாரம் ஆரம்பித்தபோதுகூட, ஓபிஎஸ்ஸை மட்டுமே கட்டம் கட்டி வந்தவர், திமுக அரசுக்கு எதிராக இப்போது திரும்பி உள்ளது, தென்மண்டல திமுகவுக்கு அதிர்ச்சியை கூட்டி வருகிறது.. ஒட்டுமொத்த திமுக வட்டாரத்தை கடுப்பாக்கியும் வருகிறதாம். நேற்றுகூட உதயகுமார் பேசும்போது, "நெருக்கடி கொடுத்து அதிமுகவினரை அபகரிக்கும் திமுக, ஸ்டாலின் செயல் சர்வாதிகார போக்கின் உச்சம் என்று விமர்சித்துள்ளார்.. திமுகவிலும் அதிகார போட்டி இருந்ததே? ஏன், உங்களுக்கும் உங்கள் அண்ணனுக்கும் அதிகார போட்டி இல்லையா? அதேபோல் வைகோ அதிகார போட்டியில் இருந்து திமுகவில் இருந்து செல்லவில்லையா? என்று கேட்டு, கூட்டணிக்குள்ளும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளார்..

கிண்டல் + கேலி
கடந்த முறை தேர்தல் பிரச்சாரத்தில், உதயகுமார் பேசும்போது, "ஸ்டாலினை ஒருமையில் பேசியதுடன், அவரை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றுவோம், குடும்பத்தையும் விரட்டி அடிப்போம்" என்றெல்லாம் பேசியதாக, போலீஸ் ஸ்டேஷன் வரை புகார் சென்றிருந்தது. அப்போது முதல் இப்போது வரை உதயகுமார் சீண்டுவது, ஸ்டாலினின் குடும்பத்தை பற்றியே இருப்பதாக கூறுகிறார்கள்.. "அதிமுக என்னைக்குமே இரண்டாக உடையாது.. திமுகதான் இரண்டாக உடைய போகிறது.. முதலில் அவங்க குடும்ப சண்டையை சரி செய்யட்டும்.. அதை சரி செய்து மீண்டுவரவே அடுத்த தேர்தல் வந்துவிடும்" என்று உதயகுமார் கிண்டலடித்ததையும் திமுக மறக்கவில்லை.

ரெய்டுகள்
இப்படி தேவையில்லாமல் மூக்கை நுழைத்து, தொடர்ந்து திமுகவை சீண்டிவருவதால், எந்நேரமும் உதயகுமார் தரப்பின் மீது ரெய்டுகள் பாயலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அப்படியே பாய்ந்தாலும், தன்னுடைய கை சுத்தமான கை என்று தெம்புடன் சொல்கிறதாம் உதயகுமார் டீம்.. இப்படி திமுகவின் கடுப்புக்கு உதயகுமார் ஆளாகி வருவதை, எடப்பாடி பிளஸ் ஆகவே பார்க்கிறாராம்.. திமுகவை விமர்சிப்பது முதல், கேள்வி கேட்பது வரை, தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி தலைவரான தானும், துணை தலைவரான உதயகுமாரும் என்பது மட்டுமல்ல, ஓபிஎஸ் செய்ய தவறியதை உதயகுமார் செய்கிறார் என்ற பூரிப்பும் சேர்ந்துள்ளதாம்.

தங்க தமிழ்செல்வன்
எப்படியும் வரும் எம்பி தேர்தலில் ஓபிஎஸ் தன்னுடைய மகன் ஓபி ரவீந்திரநாத்தை தேர்தலில் நிறுத்தும் வாய்ப்புகள் அதிகம் உண்டு... திமுக சார்பில், நிச்சயம் தங்க தமிழ்ச்செல்வன் நிறுத்தப்படலாம்.. ஓபிஎஸ்ஸுக்கு அதிமுகவில் செல்வாக்கு இல்லை என்பதை நிரூபிக்க வேண்டுமென்றால், ஆர்பி உதயகுமார்தான் சரியான நபர் என்பதையும் தீர்மானித்துள்ளாராம்.. எதிர்க்கட்சித் துணைத் தலைவராக்கியுள்ளது, ஓபிஎஸுக்கு செக் வைப்பதுடன், திமுகவுக்கும் செக் வைக்க உதவும் என்பதே எடப்பாடியின் கணக்காம்.

கடுப்பு + அதிருப்தி + சின்னம்மா பாசம்
அதாவது, மதுரை அதிமுகவில், உதயகுமாருடன் "அதிகார மோதலு"யும் ரொம்ப வருடமாகவே இருந்து வருகிறது.. எடப்பாடியும், அதற்கேற்றார்போல், உதயகுமாரையே பல விஷயத்திலும் முன்னிறுத்தி பதவிகளை தந்து வருவதால், செல்லூர் ராஜுவுக்கு இது கடுப்பை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிகிறது. போதாக்குறைக்கு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருப்பது உதயகுமார் தான் என்பதால், கூடுதல் கடுப்பில் செல்லூர் உள்ளார் போலும்.. ஆக, கடுப்பு + அதிருப்தி + சின்னம்மா பாசம் = இதெல்லாம் சேர்ந்து, ஒருவேளை இவர் ஓபிஎஸ் பக்கம் சாயக்கூடுமோ என்ற மேஜர் டவுட் ஒன்று கிளம்பி உள்ளதாம்.. இவை அனைத்தையும் பொறுமையாக கவனித்து வரும் எடப்பாடி பழனிசாமி, எகிறி அடித்து தன் ஆளுமையை நிரூபிக்க ரெடியாகி வருகிறாராம்..!












Click it and Unblock the Notifications