வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!
சென்னை: அமைச்சர் கீர்த்தனா வெளிநாடு சென்றிருப்பதே அவரின் ரீல்ஸ் மூலமாக தான் தெரிகிறது என்று சென்னை மேயர் பிரியா கிண்டல் செய்துள்ளார். மின்சாரத் துறைக்கும், மாநகராட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறிய மேயர் பிரியா, எல்லாவற்றுக்கும் மாநகராட்சியை குற்றம்சாட்டுவது சரியல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த பின் முதல்முறையாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தென் கொரியாவிற்கு சென்றுள்ள அமைச்சர் கீர்த்தனா, ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவன உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் குறித்து அந்நிறுவன அதிகாரிகளிடன் ஆலோசனை நடத்தி இருக்கிறார்.

அமைச்சர் கீர்த்தனா தென் கொரியா சென்றிருப்பது தொடர்பாக எந்தவித தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அமைச்சர் கீர்த்தனாவின் இன்ஸ்டாகிராம் பதிவை வைத்துதான் அவர் தென் கொரியா சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அமைச்சர் கீர்த்தனாவின் தென் கொரியா பயணம் குறித்து சென்னை மேயர் பிரியா விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை மேயர் பிரியா பேசுகையில், தவெக ஆட்சி அமைத்த பின் எத்தனை தொழில் முதலீடுகள் தமிழ்நாட்டில் இருந்து வெளியேறி இருக்கிறது என்பதை சில நிமிடங்களுக்கு முன் பேசினார்கள். ஆனால் தொழில்துறை அமைச்சர் டான்ஸ் ஆடி கொண்டிருக்கிறார். தற்போது டான்ஸ் மட்டும் இல்லாமல், திடீரென சுற்றுப்பயணமாக தென் கொரியா சென்றுள்ளார்.
ஆனால், இதுவரை அதுதொடர்பாக எந்த தகவலும் வெளியில் சொல்லப்படவில்லை. பொதுவாக அமைச்சர்கள் வெளிநாடு பயணிக்கும் போது தொழில் முதலீடுகளை ஈர்க்க சென்றுள்ளார் என்றால் பல்வேறு திட்டங்கள் முன்கூட்டியே வகுக்கப்படும். அதுதொடர்பாக ஒரு செய்தியாளர் சந்திப்பாவது நடக்கும். ஆனால் அமைச்சர் கீர்த்தனா சோசியல் மீடியாவில் ரீல்ஸ், புகைப்படம் மட்டும் போட்டுள்ளார்.
அதன் மூலமாகவே கீர்த்தனா அங்கு சென்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் திமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் போது செய்தியாளர்களை புள்ளி விவரங்களுடன் பேசுவார். அதுதான் வெளிப்படையான நிர்வாகம். ஆனால் இன்று ஆட்சி அமைத்திருப்பவர்கள் வெளிப்படையாக இருப்போம் என்றார்கள். இதுதான் உங்களின் வெளிப்படைத்தன்மையா?
அமைச்சரின் வெளிநாடு பயணம் குறித்து கூட எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. மக்களின் கேள்விகளுக்கு தவெக பதில் அளித்துதான் ஆக வேண்டும். திமுக மின்சாரத்தை தடை செய்கிறது, கவுன்சிலர்கள் பிரச்சனை செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டி வருகிறார்கள். மின்சாரத்திற்கும் மாநகராட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மின்சாரத்துறை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதே அவர்களுக்கு தெரியவில்லை.
மின்சாரப் பிரச்சனை தொடர்பாக அந்த துறையின் அமைச்சரிடம் தான் கேட்க வேண்டும். உள்ளாட்சி நிர்வாகத்தில் திமுகவினர் இருப்பதால், எல்லா பிரச்சனைக்கும் திமுகவை சாட்டுகிறார்கள். நகராட்சி நிர்வாகத்துறை யார் வசம் உள்ளது? அப்படி இருக்கையில் சென்னை மாநகராட்சி வேறு, சென்னை குடிநீர் வாரியம் வேறு என்பது அமைச்சருக்கு நன்றாக தெரியும். எல்லாவற்றுக்கும் மாநகராட்சியை குற்றம்சாட்டுவது எந்த வகையில் சரியாக இருக்கும் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications