எம்பிபிஎஸ் படிப்புக்கு கட்டணம் பாருங்க.. MBBS, BDS படிப்புகளுக்கான கலந்தாய்வு.. எப்போது தெரியுமா?
சென்னை: எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஜுலை 21ல் மருத்துவக் கலந்தாய்வு தொடங்கப்படுகிறது. 2025-26-ம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான இந்த கலந்தாய்வு ஆன்லைனில் வரும் 21ம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.. அதேபோல,சென்னை; தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கான அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் ஒதுக்கீட்டு இடங்களுக்கான கட்டண விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
நம்முடைய தமிழக அரசு மருத்துவ கல்லூரிகளில் இருக்கும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. மீதமுள்ள 85 சதவீத இடங்கள், தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இந்த மாதம் இறுதியில் தொடங்கப்பட உள்ளது..

மாணவர்கள் விண்ணப்பம்
இதற்காக 11,350 மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பதாரர்களின் நீட் மதிப்பெண்களை மத்திய அரசிடமிருந்து பெற்று அதன் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படுகிறது. விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
இந்நிலையில், மருத்துவ கலந்தாய்வு குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.. அதில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு https://mcc.nic.in என்ற இணையதளத்தில் ஜூலை 21-ம் தேதி தொடங்குகிறது.
கட்டண விவரங்கள்
நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவ, மாணவிகள் இந்த இணையதளத்தில் வரும் 21-ம் தேதி முதல் 28-ம் தேதி நண்பகல் 12 மணிக்குள் பதிவு செய்யவேண்டும். 28-ம் தேதி பிற்பகல் 3 மணி வரை கட்டணம் செலுத்தலாம். 22-ம் தேதி முதல் 28-ம் தேதி நள்ளிரவு 11.55 மணி வரை இடங்களை தேர்வு செய்யலாம்.
தரவரிசை பட்டியல் அடிப்படையில் 29, 30-ம் தேதிகளில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்படும். அதன் விவரங்கள் 31-ம் தேதி வெளியிடப்படும். இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் ஆகஸ்ட் 1 முதல் 6-ம் தேதிக்குள் சேர வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் ஆகஸ்ட் 7, 8-ம் தேதிகளில் நடைபெறும்.
நர்சிங் படிப்பு
2-ம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 12-ம் தேதியும், 3-ம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 3-ம் தேதியும் தொடங்கும். 3 சுற்று கலந்தாய்வு முடிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கும்.
புனே ராணுவ கல்லூரியில் உள்ள பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், அந்த இடங்களுக்கும் மேற்கண்ட தேதிகளில் கலந்தாய்வு நடைபெறும்" என்று கூறப்பட்டுள்ளது.
கட்டணங்கள் அறிவிப்பு
அதேபோல, தமிழகத்தில் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில், 3,450 எம்.பி.பி.எஸ்., இடங்களும், தனியார் மருத்துவ பல்கலையில், 550 எம்பிபிஎஸ் இடங்களும் உள்ளன.
அதில், 65 சதவீதம் அரசு ஒதுக்கீட்டுக்கும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீட்டுக்கும் வழங்கப்படுகின்றன. அந்த இடங்களுக்கான, இந்தாண்டு கல்வி கட்டணத்தை, நீதிபதி ஆர்.பொங்கியப்பன், மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ப.செந்தில்குமார், டாக்டர் கீதாலட்சுமி, ஆர்.பாலசந்திரன், கே.ஆனந்தகண்ணன் ஆகியோர் அடங்கிய குழு, பல்வேறு கட்ட ஆய்வுக்கு பின் இறுதி செய்துள்ளது.
அந்த வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது: "21 சுயநிதி கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 4.35 லட்சம் ரூபாய் முதல் 4.50 லட்சம் ரூபாய் வரை ஆண்டு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதை தவிர, 4 தனியார் பல்கலைகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, தலா 5.40 லட்சம்; நிர்வாக இடங்களுக்கு 16.20 லட்சம்; என்.ஆர்.ஐ., இடங்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதை தவிர, கூடுதலாக, 60,000 ரூபாய் வரை மேம்பாட்டு நிதியாக வசூலிக்கலாம். மற்றபடி, கல்வி கட்டணம், சிறப்புக் கட்டணம், சேர்க்கை கட்டணம் என அனைத்து விதமான கட்டணங்களும் இதற்குள் அடங்கும்" என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, மருத்துவ படிப்புகளில் சேரும் மாணவர்கள், கல்லுாரிகளைத் தேர்வு செய்வதற்கு முன், அதற்கான கட்டண விபரங்களை முழுமையாக அறிந்து முடிவு எடுக்குமாறு, மருத்துவக் கல்வி இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications