இனி எப்போதும் திமுகவோடு தான்.. திமுக முடிவுதான் நம்முடையதும்.. வைகோ பேச்சு! திரும்பிப் பார்த்த துரை
சென்னை: “இனி திமுக உடன் தான் கூட்டணி, இனி திமுக என்ன முடிவு எடுக்கிறதோ அதைth தான் நாமும் எடுக்கவேண்டும்” என நேற்று சென்னையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. தான் செய்த மிகப்பெரிய தவறு குறித்தும் பேசி உள்ளார் வைகோ.
மதிமுக பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுன மூர்த்தி தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ, பொருளாளர் செந்திலதிபன், துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் வந்து பங்கேற்றனர்.

இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “தொண்டர்கள் தான் உயிர் என்ற உணர்வோடு வாழ்கிறவன் நான். எனக்கு முகவரி கொடுத்தவர்கள் நீங்கள் தான். மத்திய அமைச்சர் வாய்ப்பை ஏன் நிராகரித்தீர்கள் என பலரும் பலமுறை என்னிடம் கேட்டுள்ளார்கள். நான் அதை தவறாக நினைக்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணித்ததை தான் தவறு என நினைக்கிறேன். இன்று அதற்காக வருந்துகிறேன்.
திமுகவிற்கு எதிராக மக்கள் நலக் கூட்டணி அமைத்திருக்க கூடாது என கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் இப்போது சொல்கிறார்கள். நான் அவர்களிடம் “இப்ப சொல்லி என்னங்க பிரயோஜனம்” என்று சொன்னேன். மதிமுகவை நடத்த நமது மாவட்ட செயலாளர்கள் மிகவும் பாடுபடுகிரார்கள். அவர்களுக்கு நான் துரோகம் செய்யக்கூடாது அல்லவா? அதனால் இனி திமுக உடன் தான் கூட்டணி, இனி திமுக என்ன முடிவு எடுக்கிறதோ அதை தான் நாமும் எடுக்கவேண்டும்” எனப் பேசியுள்ளார் வைகோ.
மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டினால் 'இந்தியாவின்' ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும்.. எச்சரித்த வைகோ
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் தொடங்கி, மதிமுக திமுக உடன் தொடர்ந்து கூட்டணி அமைத்து தேர்தல்களைச் சந்தித்து வருகிறது. அதற்கு முன்பு 2004 லோக்சபா தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 4 எம்.பி பதவிகளை பெற்றது மதிமுக. பின்னர், அதிமுக கூட்டணிக்குச் சென்றது. 2011ல் அதிமுக கூட்டணியில் மதிமுகவிற்கு குறைவான தொகுதி கொடுக்கப்பட்டதால் வைகோ கூட்டணியில் இருந்து விலகி தேர்தல் புறக்கணிப்பு செய்தார்.
எதிர்கட்சியான திமுகவின் கூட்டணிக்கு வருமாறு முரசொலி நாளேட்டில் வரிப்புலி வரிசையே வருக வருக என தலையங்கம் வெளியிட்டார் கருணாநிதி. என்றபோதிலும் வைகோ, மிகவும் ஆதங்கத்தோடு, “எனக்கு ஆதரவு கொடுத்த அதிமுகவே எனக்கு அங்கீகாரம் தரவில்லை, எனக்கு அங்கீகாரம் கொடுத்த திமுகவின் ஆதரவும் எனக்கு தேவையில்லை” என கூறி தேர்தல் புறக்கணிப்பு செய்தார். 2016ல் மக்கள் நலக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு தோல்வியடைந்தது மதிமுக.












Click it and Unblock the Notifications