உடைகிறது மதிமுக! மல்லை சத்யாவை நீக்க வைகோ மறுப்பு! கட்சிப் பதவியில் இருந்து துரை வைகோ விலகல் பின்னணி
சென்னை: மதிமுகவின் நிர்வாக குழு நாளை கூடும் நிலையில் அக்கட்சியின் முதன்மைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து, பொதுச்செயலாளர் வைகோ மகன் துரை வைகோ ராஜினாமா செய்துள்ளார். வைகோ தமது வலது கரமான மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவை கட்சிப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற துரை வைகோவின் நெருக்கடியை ஏற்க மறுத்ததால் தற்போது மதிமுக பிளவுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
வாரிசு அரசியலுக்கு எதிராக திமுகவில் இருந்து வெளியேறி மதிமுகவை தொடங்கியவர் வைகோ. அக்கட்சியில் பொதுச்செயலாளர் பதவிதான் அதிகாரமிக்கது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஒரு கட்டத்தில் மகன் துரை வைகோவை கட்சிக்குள் கொண்டு வந்து மதிமுகவின் முதன்மை செயலாளராக்கினார். மதிமுகவின் ஒரே ஒரு எம்பியாகவும் பதவி வகிக்கிறார் துரை வைகோ.
மதிமுகவுக்குள் துரை வைகோ திணிக்கப்பட்டதற்கு எதிராக வைகோவுக்கு நெருக்கமான அனைத்து சீனியர்களும் எதிர்ப்பும் தெரிவித்தனர். இந்த எதிர்ப்பை வைகோ பொருட்படுத்தாமல் இருந்ததால் அவர்கள் மதிமுகவை விட்டே வெளியேறிவிட்டனர். இந்த விவகாரத்தில்தான் மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த கணேசமூர்த்தி தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.
மதிமுகவின் எஞ்சிய சீனியர், மல்லை சத்யா மட்டும்தான். அவரும் துரை வைகோவுக்கு தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தார். மதிமுகவை விட்டு திமுகவுக்கு தாவும் முயற்சிகளையும் மல்லை சத்யா மேற்கொண்டார்.. ஆனாலும் வைகோ தந்த நெருக்கடியால், மல்லை சத்யாவை திமுக சேர்த்துக் கொள்ளவில்லை.
இந்த பின்னணியில் துரை வைகோவின் கை மதிமுகவில் ஓங்கியது. துரை வைகோவின் ஆதரவாளர்கள் மதிமுகவின் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டனர். ஆனால் ஜாதி பார்த்துதான் துரை வைகோ இத்தகைய நியமனங்களை மேற்கொள்கிறார் என்கிற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.
அண்மையில் சென்னையில் மதிமுக தொழிலாளர் முன்னணி பொதுக்குழுவில் இந்த விவகாரம் பகிரங்கமாக வெடித்தது. இதனையடுத்து மல்லை சத்யாவை, மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று துரை வைகோ ஆதரவாளர்கள், பல மாவட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினர்.
இதனைக் கண்டித்த வைகோ, ஏப்ரல் 20-ந் தேதி மதிமுக நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறும் வரை இத்தகைய தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என எச்சரித்திருந்தார். மேலும்,துரை வைகோ தரப்பின் நெருக்கடியை ஏற்க மறுத்த மல்லை சத்யாவை, மதிமுக கட்சிப் பதவியில் இருந்து நீக்கவும் மறுத்தார்.
இதனால் இன்று திடீரென மதிமுகவின் முதன்மை செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார். மதிமுகவின் நிர்வாகக் குழு நாளை நடைபெறும் நிலையில் துரை வைகோ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முதன்மை செயலாளர் பதவி விலகல் ஏன்? துரை வைகோ
இது தொடர்பாக துரை வைகோ வெளியிட்ட அறிக்கையில், நான் தலைமைக் கழகச் செயலாளர் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் அதை சகித்துக் கொள்ள முடியாமல் நான்கு ஆண்டுகளாக, கட்சிக்கும் தலைமைக்கும் தீராத பெரும் பழியை சுமத்தி சுகம் காணும் ஒருவர் மத்தியில் கட்சியின் 'முதன்மை செயலாளர் "என்று தலைமைக் கழக பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றிட என் மனம் விரும்பவில்லை எனவே கழகத்தின் முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்பேன். ஆனால் அதன் பிறகு தலைமைக் கழகத்தின் மிக முக்கிய முடிவுகள் மேற்கொள்ளும் கூட்டங்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டேன். என்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன். அதே நேரத்தில் மறுமலர்ச்சி திமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். திருச்சி தொகுதி மக்கள் மகத்தான வெற்றி பெற செய்து தங்கள் பிரதிநிதியாக நாடாளுமன்றத்திற்கு என்னை அனுப்பி வைத்துள்ளார்கள். அந்த மக்களுக்காக ஒரு எம்பி என்ற வகையில் கண்ணும் கருத்துமாக கடமையாற்றுவேன். எப்போதும் போல இயக்கத் தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் அரணாகவும் சுக துக்கங்களில் பங்கேற்கும் தோழனாகவும் இருப்பேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஏழு ஆண்டுகளாக நான் மேற்கொண்ட முயற்சிகளை கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தொடர வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நம் தலைவர் மனம் கலங்கி விடாமல் அவரைப் பாதுகாக்க வேண்டும் என்று இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications