மீண்டும் காவல் ஆணையர் அலுவலகம் அழைத்து வரப்பட்டார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
சென்னை: திமுக ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.100 கோடி லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். 3 மணி நேர விசாரணைக்கு பிறகு அன்பில் மகேஷ்க்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. தொடர்ந்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் அவர் காவல் ஆணையர் அலுவலகத்திற்கே அழைத்து செல்லப்பட்டார். சிறிது நேரம் கழித்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியது தொடர்பான ரூ.100 கோடி ஊழல் வழக்கில், தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்த நிலையில், அவரை சென்னை அமைந்தகரையில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரகம் அழைத்து வரப்பட்ட அன்பில் மகேஷிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். வீடியோ பதிவு செய்து விசாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அன்பில் மகேஷ் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அன்பில் மகேஷுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதையடுத்து வெளியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அன்பில் மகேஷ், "சட்டப்படி வழக்கை எதிர்கொள்வேன்.. தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளில் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளோம்.. இது யாருக்கோ கண்ணை உறுத்துகிறது. முன் ஜாமீன் மனு தள்ளுபடி ஆகிவிட்டது என்ற நினைப்பில் என்னை கைது செய்துள்ளனர்" என்றார்.
மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பிறகு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் மீண்டும் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அழைத்து வரப்பட்டார். அங்கு வந்த சேகர்பாபுவுக்கும் அனுமதி அளிக்கப்பட வில்லை.
சிறிது நேரம் கழித்து அன்பில் மகேஷ் பொய்யாமொழி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்பிறகு அன்பில் மகேஷ் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்படுவாரா? அல்லது ஜாமினில் விடுவிக்கப்படுவாரா? என்பது அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவுகு பிறகே தெரியும்.
சென்னை உயர் நீதிமன்றம், முன் ஜாமீனை மறுத்துள்ள நிலையில், அன்பில் மகேஷ் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்படவே அதிக வாய்ப்புள்ளதாக காவல்துறை உயர் அதிகாரிகள் மத்தியில் பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications
