Gingee Clue: செஞ்சி சிறுமிக்கு பிறந்தநாள் கேக் வாங்கி வந்த அக்கா கணவரின் தம்பி! துருவும் சிபிசிஐடி!
விழுப்புரம்: செஞ்சி சிறுமி காணாமல் போன வழக்கில் அவரது மூத்த சகோதரிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை வீட்டாரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிலும் சிறுமிக்கு பிறந்தநாள் கேக் வாங்கி வந்த மாப்பிள்ளையின் தம்பியிடம் விசாரிக்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தையே உலுக்கி வரும் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி சிறுமி காணாமல் போன வழக்கில், சிபிசிஐடி போலீசாரின் விசாரணை புதிய கோணத்தில் தீவிரமடைந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த, சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆலம்பூண்டி குளக்கரை தெருவை சேர்ந்தவர்கள் வடிவேலு - பவானி தம்பதி. இவர்களது இரண்டாவது மகள் ஹேமலதா ஆலம்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த அக்டோபர் 11-ம் தேதி தனது 7-வது பிறந்தநாளை கொண்டாடிய சிறுமி, அன்று இரவு பெற்றோருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, அதிகாலை 3 மணியளவில் மாயமானதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 தனிப்படைகள் அமைத்து தேடியும், 15 நாட்களாகியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து கடந்த 21-ம் தேதி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி டிஎஸ்பிகள் கீதா மற்றும் வேல்முருகன் தலைமையிலான குழுவினர் 5-வது நாளாக கிராமத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலம்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை தற்காலிக விசாரணை மையமாக மாற்றியுள்ளனர்.
பள்ளியின் கதவுகளை மூடிக் கொண்டு, உள்ளே யாரையும் அனுமதிக்காமல் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக சிறுமியின் தாயிடம் தனியாக விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது சிறுமியின் பாட்டி சாந்தி, பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு, பல மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.
சிறுமி காணாமல் போன இரவு நடந்தது என்ன, வீட்டில் யார்-யார் இருந்தனர், சிறுமியின் நடவடிக்கைகள் குறித்து அவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.
இந்த வழக்கில் மிக முக்கிய திருப்பமாக பார்க்கப்படுவது சிறுமியின் அக்காவிற்கு மாப்பிள்ளை பார்த்த விவகாரம்தான். சிறுமியின் அக்காவிற்கு திருமணம் பேசியதாக கூறப்படும் தினேஷ் என்பவரின் குடும்பத்தினரிடம் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
தினேஷின் தாய் அஞ்சலா மற்றும் அவரது தம்பி கார்த்தி ஆகியோர் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இதில் கார்த்தி தான் சிறுமி காணாமல் போன அன்று, அதாவது அக்டோபர் 11-ம் தேதி பிறந்தநாள் அன்று, சிறுமிக்கு பிறந்தநாள் கேக் வாங்கி வந்து கொடுத்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிறந்தநாள் கொண்டாடிய சில மணி நேரத்தில் சிறுமி மாயமானதால், கேக் கொடுத்த கார்த்தியிடம் கேக் கொடுக்க வந்த போது என்ன பேசினார், எவ்வளவு நேரம் வீட்டில் இருந்தார், உள்ளிட்ட கோணங்களில் அவரிடம் சிபிசிஐடி போலீஸார் தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இது தவிர, ஆலம்பூண்டி கிராமத்தில் ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், சரித்திர குற்றவாளிகள், சந்தேகத்திற்கு இடமான நபர்கள் என ஒரு பட்டியலை சிபிசிஐடி போலீசார் தயாரித்து, அவர்களையும் ஒவ்வொருவராக வரவழைத்து விசாரித்து வருகின்றனர்.
சிறுமி கடத்தப்பட்டாரா, விற்பனை செய்யப்பட்டாரா அல்லது குடும்ப பகை காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 14 நாட்களை கடந்தும் சிறுமி குறித்து எந்த தகவலும் இல்லாததால் ஆலம்பூண்டி கிராமத்தில் பதற்றம் நிலவி வருகிறது.





Click it and Unblock the Notifications
