அன்பில் மகேஸ் கைது! தவெக அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது.. ஸ்டாலின் கடும் கோபம்
சென்னை: அன்பில் மகேஷ் கைதுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்த அன்பில் மகேஷை அரசியல் காழ்ப்புணர்வோடு தவெக அரசு கைது செய்துள்ளது. அன்பில் மகேஸ் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார் என்றும், மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பிக்க நினைக்கும் தவெக அரசின் எண்ணம் ஈடேறாது எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 100 கோடி மோசடி செய்த வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார். மத்திய குற்றப்பிரிவு போலீசார் அன்பில் மகேஷை கைது செய்து அவரிடம் வீடியோ பதிவு செய்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அன்பில் மகேஷ் கைதுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் கூறியிருப்பதாவது:- "அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைக் கைது செய்துள்ள த.வெ.க. அரசுக்குக் கடும் கண்டனம்!
தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த திரு. அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது.
அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது!" என்று கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications
