மீரா மிதுன் நீதிமன்றத்தில் ஆஜர்...ஆக 27 வரை நீதிமன்ற காவல்....
பட்டியலின மக்களை அவதூறாக பேசி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கேரளாவில் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்துவரப்பட்ட மீரா மிதுன் சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வரும் ஆக 27 ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டார்.
Recommended Video

சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகை மீரா மிதுன் தனது பேச்சுக்கு கிடைத்த எதிர்மறை பரபரப்பை உண்மை என நம்பி கண்டபடி பேச ஆரம்பித்தார். அதன் விளைவு சட்டத்தின் முன் எதை பேச வேண்டும் பேசக்கூடாது என்று தெரியாமல் பேசியதன் விளைவு இன்று சிறைக்கம்பியை எண்ணும் அளவுக்கு கொண்டுச் சென்றுள்ளது.
சினிமாத்துறையில் உள்ளவர்கள் சட்டம், நீதிமன்றம், போலீஸ் அனைத்தையும் கிண்டல் செய்து காட்சி அமைப்பது, நீதிமன்றத்தில் ஜட்ஜ் முன் எகத்தாளம் பேசுவது, சட்டத்தையே தூக்கி எரிந்து டஜன் கணக்கில் கொலை செய்துவிட்டு இறுதியில் ஹீரோ ஹீரோயினுடன் பாட்டுப்பாடி சுபம் போட்டு முடிப்பது போல் காட்சி அமைத்து கைத்தட்டல் வாங்குவதை நடைமுறையில் பலரும் பார்த்திருப்பார்கள்.
ஆனால் நிஜ வாழ்க்கையில் அவர்கள் சினிமா வாழ்க்கைப்போலவே நடந்து குற்றவியல் நீதிமன்றங்களில் தலை குனிந்து நாள் முழுவதும் நின்ற கதைகளை பலமுறை பொதுமக்கள் பார்த்துள்ளனர். சினிமாவில் ஐபிஎஸ் ஆஃபிசராக, மிகப்பெரிய தாதாவாக நடித்த நடிகர் நிஜ வாழ்க்கையில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தில் சிக்கி தலைமறைவாகி பின்னர் நீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்டது நடந்தது.
அவர் விபத்தை ஏற்படுத்தியதற்கு அபராதமும், குடித்துவிட்டு காரை ஓட்டியதற்கு அதிகப்பட்சம் 6 மாதம் லைசென்ஸ் முடக்கமும் தான் தண்டனை ஆனால் அடிப்படை சட்ட அறிவு இல்லாமல் தப்பி ஓடி அசிங்கப்பட்டார், சமீபத்தில் பிரபல நடிகர்கள் நீதிமன்ற நடைமுறை தெரியாமல் சிக்கி நீதிபதியால் கண்டிக்கப்பட்டதும் அனைவரும் பார்த்தோம்.
இதுபோன்ற சட்ட அறிவு இல்லாமல் பப்களில், பார்களில் பேசுவதுபோல் யூடியூபில் பட்டியலின மக்களை அவதூறாக பேசி சிக்கினார் மீரா மிதுன். வழக்கு போடப்பட்டாலும் அதன் பின்னணி சட்டப்பிரிவுகள் குறித்த அடிப்படை ஞானம் இல்லாமல் கண்டபடி பேசி சவால் எல்லாம் விட்டு தலைமறைவானார். ஏதோ போலீஸ் இவரை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவார்கள் என நினைத்தார்.
ஆனால் யதார்த்தம் அதுவல்ல, சட்டம் தன் வேலையை காட்டியது, கைது செய்யப்பட்ட மீரா மிதுன் கதறி அழுது வீடியோ வெளியிட்டதும் கேலிப்பொருள் ஆனது. இந்நிலையில் போலீஸாருடன் வாக்குவாதம் செய்து முரண்டுப்பிடித்த மீரா மிதுனை சென்னை அழைத்து வந்த போலீஸார் சட்டத்தின் பிரிவை புரிய வைத்தனர்.
அதன் பின்னரே தாம் வசமாக சிக்கியதை உணர்ந்து மவுனமானார் மீரா மிதுன். பின்னர் போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுத்து கொரோனா உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைப்பு கொடுத்த மீரா மிதுனை சைதாப்பேட்டை 17 வது குற்றவியல் நீதிமன்ற நடுவர் கிருஷ்ணனன் வீட்டில் ஆஜர்படுத்தினர்.
அவரது வழக்கு குறித்து விசாரித்த நீதிமன்ற நடுவர் வரும் ஆகஸ்டு 27 ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சைதாப்பேட்டை சப்ஜெயிலில் அடைக்கப்படுவார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications