மதுராந்தகமே அதிருது.. "ம்மா, எழுந்து வாம்மா".. கண்ணீரில் மிதக்கும் மேல்மருவத்தூர்.. குவியும் கூட்டம்
சென்னை: புகழ்பெற்ற ஆன்மீகவாதியான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.. பங்காரு அடிகளாருக்கு பொதுமக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.. மேல்மருவத்தூரில், 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.
பங்காரு அடிகளாரை, அம்மனின் அருள்பெற்றவராக பக்தர்கள் வணங்கி வந்தனர்.. அதனால், பக்தர்களால் "அம்மா" என்று மிகுந்த அன்போடு அழைக்கப்பட்டார் பங்காரு அடிகளார். சித்ரா பவுர்ணமி, ஆடிப்பூரம், தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் மேல்மருவத்தூர் வந்து பங்காரு அடிகளாரிடம் ஆசி பெற்று வந்தனர்.

லட்சக்கணக்கான பக்தர்கள் வருடந்தோறும் மாலை அணிந்து விரதமிருந்து ஆதிபராசக்தி கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
அஞ்சலி: புகழ்பெற்ற ஆன்மீகவாதியான மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்தார்.. இந்த மறைவு செய்தி, அவரது பக்தர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவரது உடலுக்கு தலைவர்களும், பொதுமக்களும், பக்தர்களும் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வீடு முன்பு குவிந்தபடியே உள்ளனர்..
தமிழ்நாடு மட்டும் இல்லாமல் ஆந்திரா, கர்நாடாகா, கேரளா போன்ற மாநிலங்களில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கென்று பக்தர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். எனவே பக்தர்கள் மேல்மருவத்தூரை நோக்கி வந்து கொண்டுமிருக்கிறார்கள்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்: அடிகளாருக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக, முக்கிய பிரமுகர்களும், பல்லாயிரக்கணக்கான மக்களும் கூடுவார்கள் என்பதால், மேல்மருவத்தூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, டிஜிபி சங்கர் ஜிவால், சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி அருண் ஆகியோரது மேற்பார்வையில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன், டிஐஜிக்கள் பொன்னி, முத்துசாமி மற்றும் 9 மாவட்ட எஸ்பிக்கள், 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையிலும், அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாகவும் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீஸார் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட் டங்களை சேர்ந்த 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்று விடுமுறை: இதனிடையே, பங்காரு அடிகளார் மறைவையொட்டி மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆன்மிக குரு பங்காரு அடிகளார் மறைவையொட்டி மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், "இன்று வெள்ளிக்கிழமை 20.10.2023 மதுராந்தகம் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை" என்று தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications