டெல்டா+தென் மாவட்டங்களில் குளு குளு வானிலை! மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், இன்று டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த ஆண்டும் தென்னிந்தியாவில் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் நீர் நிலைகள் வேகமாக வறண்டு வருகின்றன. இதனால் வன விலங்குகள் மட்டுமின்றி மக்களும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தென்னிந்தியாவில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தமிழ்நாடு, கேரளா, கடலோர ஆந்திரா மற்றும் கடலோர ஒடிசாவில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் கடந்த ஆண்டு தொடங்கிய பருவமழை, இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகையுடன் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு தீவிரமாக இருந்தது. சில நாட்களில், காலை 10 மணி வரை கூட பனி மூட்டம் பல பகுதிகளில் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து தற்போது வெயில் தீவிரமடைந்திருக்கிறது.
பிப்ரவரி மாதம் இறுதி தொடங்கி தற்போதுவரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இன்று டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
"தென் இந்தியப்பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.ஏனைய தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை மற்றும் நாளை மறுநாள் தென் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 3ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழக மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
4ம் தேதி முதல் 6ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை பற்றியளவில், இன்று தொடங்கி, 4ம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை அடுத்த ஐந்து தினங்களில் 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஒரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்த அளவில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications