சென்னையில் உலாவும் ரோலக்ஸ்? 50 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் பறிமுதல்! வாயடைத்த அதிகாரிகள்
சென்னை: சென்னையில் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குனரகம் நடத்திய சோதனையில் சுமார் 50.65 கோடி மதிப்பிலான 10.13 கிலோ மெத்தாம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, போதைப் பொருளை இலங்கைக்கு கடத்த முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ரூ.1.30 கோடி பணமும் மூன்று வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது
கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் மிகப்பெரிய அளவில் போதை பொருட்கள் பிடிபட்டது. மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் ஆயிரம் கோடிக்கும் மேல் போதை பொருட்கள் பிடிபட்டதாகக் கூறப்பட்டது.

கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் உள்ள குடோனில் நடத்தப்பட்ட சோதனையில் மெத்தபட்டமைன் மற்றும் சூடோபெட்ரொம் ஆகிய போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக யூகங்கள் கிளம்பின. இந்நிலையில் கைதானவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த வழக்கில் திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தவரும், பிரபல தயாரிப்பாளருமான ஜாபர் சாதி கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து சென்னையில் போதைப் பொருள் கும்பலின் நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள், போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், தமிழக போலீசார் தனி தனியாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 6.9 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையிலிருந்து ராமநாதபுரம் வழியாக இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்தப்படவுள்ளதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்ததன் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த ஒருவரிடம் விசாரணை நடத்தியதில் அவரிடம் இருந்து 6.9 கிலோ மெத்தம்பெட்டமைன் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்த பைசூல் ரஹ்மான், இப்ராஹிம் மற்றும் மன்சூர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு நாடுகளிடம் பெறப்பட்ட போதைப்பொருளை ராமநாதபுரம் எடுத்து சென்று அங்கிருந்து கடல் வழியாக இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மீண்டும் போதை பொருள் கடத்தல் கும்பல், இராமநாதபுரம் வழியாக போதைப் பொருள் கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கடந்த 29.08.2024 மற்றும் 30.08.2024 ஆகிய தேதிகளில், சென்னையில் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் சுமார் 50 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 கிலோ 130 கிராம் எடையுள்ள மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், போதைப்பொருளை சென்னையில் இருந்து இராமநாதபுரம் கொண்டு சென்று அங்கிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 6 பேரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் ரூ.1.30 கோடி பணமும் மூன்று வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 130 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் தமிழகத்தில் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications