எம்.ஜி.ஆர் மரணம்! அடுத்த நாள் ஜெ. வீட்டில் நடந்தது என்ன? மனம் திறந்த செங்கோட்டையன்!
சென்னை: 1989இல் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக அந்தக் காலத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த கேஏ செங்கோட்டையன் மனம் திறந்து பல உண்மைகளைப் பேசி இருக்கிறார்.
எம்.ஜி.ஆர். காலத்து அதிமுகவில் மிகச் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக இருந்தவர் கேஏ செங்கோட்டையன். அதன்பிறகு ஜெயலலிதாவை அதிமுக என்ற மாபெரும் கட்சிக்குத் தலைமையேற்ற வைத்தவர்களில் இவரும் ஒருவர். பல ஆண்டுகாலம் ஜெயலலிதாவின் பின்புலமாக இருந்து தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தவர் என்று இவரைப்பற்றி அரசியல் வட்டாரத்தில் சொல்வார்கள். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவை எதிர்த்து களம் கண்ட அணியில் முக்கிய நபராக இருந்தவர்.

அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் எம்.ஜி,ஆர் மறைவுக்குப் பின் நடந்தது என்ன? ஜெயலலிதா எப்படி கட்சியைக் கைப்பற்றினார்? அவரை திமுகவினர் எப்படி ஒடுக்கப்பார்த்தனர் என்பது பற்றிய பல மர்மங்களை அவிழ்த்து வெளிப்படையாகப் பேசி இருக்கிறார்.
கேஏ செங்கோட்டையன் அளித்துள்ள பேட்டியில், “1984 ஆம் வருடம் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவர் அமெரிக்கா போய்விட்டார். அதன்பிறகு தேர்தல் வந்தது. ஜெயலலிதா 512 கூட்டங்களில் கட்சியின் வெற்றிக்காக பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். அப்போது கோவை மற்றும் ஈரோடு இரண்டு மாவட்டங்களுக்கும் நான் தான் பொறுப்பாளர். அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் வெற்றிபெற்றோம். 154 தொகுதிகளில் வென்றோம்.
எம்.ஜி.ஆர் அமெரிக்காவிலிருந்து கொண்டே தேர்தலில் வென்றார். 10 ஆயிரம் கிமீட்டர் தூரத்தில் மருத்துவமனையில் படுத்துக்கொண்டே ஒரு தலைவனால் தேர்தலில் ஜெயிக்க முடியும் என்று காட்டியவர் அவர். சிகிச்சை முடிந்து நேராகப் பதவியேற்க வந்தார். 1984லேயே ஜெயலலிதா மாஸ் லீடராக இருந்தார். 1982இல் அவர் கொள்கைப்பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். கூடவே நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.
நான் 1980இல் எம்.எல்.ஏவாக ஆனேன். அடுத்து மாவட்டச் செயலாளரானானேன். 19 வருடங்கள் ம.செவாக இருந்தேன். எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை சரியில்லை என்று செய்தி கிடைத்ததுமே நாங்கள் மனரீதியாகச் சோர்ந்துவிட்டோம். அப்போலோவில் இருந்த அவர் உடனடியாக அமெரிக்கா அனுப்பப்பட்டார். அவரை ஆம்புலன்சில் ஏற்றிக் கொண்டு ஏர்போர்ட் போவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. கிட்டத்தட்ட 50 ஆயிரம் பேர் கூடிவிட்டார்கள். அமெரிக்காவில் என் உறவினர் பெருமாள் சாமி இருந்தார். அடுத்து பெரியசாமி. பத்திரிகையாளர் மணியன் கூடவே அவருடன் சென்றார். இவர்கள்தான் எம்.ஜி.ஆரை கவனித்துக் கொண்டார்கள். உடல்நலம் தேறி மீண்டும் அவர் முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்தார்.
அவருக்குப் பிறகு ஜெயலலிதாவுக்குத் தலைவராக வேண்டும் என்ற ஆசை எல்லாம் கிடையாது. நாங்கள் கட்டாயப்படுத்தித்தான் அவரை தலைவராக்கினோம். எம்.ஜி.ஆரின் மறைவை ஜெயலலிதா உட்பட எங்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. 3 நாட்கள் நாங்கள் தூங்கவே இல்லை. அந்த நேரத்தில் நான் எம்.எல்.ஏ. ஆட்சிக்கு ஒரு ஆபத்து ஏற்பட்டது. ஜானகி அம்மா ஒரு பக்கம், ஜெயலலிதா இன்னொரு பக்கம் எனப் பிரிந்தனர். கட்சி இரண்டானது.
ஜெயலலிதாவுக்கு அப்போது கட்சியின் தலைமை பொறுப்பு வரும் திட்டமே இல்லை. பன்ருட்டியார், கேகேஎஸ்எஸ்ஆர், திருநாவுக்கரசு, அரங்கநாயகம் என நாங்கள் 5 பேர் அவரைப் பார்க்கப் போனோம். 'கட்சியை உங்களால்தான் காப்பாற்ற முடியும்’ என்று கோரிக்கை வைத்தோம். எங்களின் கோரிக்கையைக் கேட்டுக் கொண்டவர் 'பொறுமையாக இருங்கள் யோசிப்போம்’ என்று சொல்லிவிட்டார்.
அதன்பின்னர் எம்.ஜிஆரின் உடல் அடக்கம் செய்வதற்கு எடுத்துச் செல்லப்பட்டது. உடல் இருந்த பீரங்கி வண்டியில் ஜெயலலிதா ஏறிய போது கீழே தள்ளப்பட்டார். உடனே அவரை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் போனோம். அவர் அப்செட் ஆகி இருந்தார். எதுவும் பேசாமல் வந்துவிட்டோம்.
அடுத்த நாள் சென்ற போது, ஜானகி அம்மாவை முதல்வர் என அறிவித்துவிட்டனர். அதை எதிர்த்து 33 எம்.எல்.ஏக்கள் கட்சியில் இருந்து பிரிந்து ஜெயலலிதா பக்கம் வந்தோம். பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலை. அப்போது பிஹெச் பாண்டியன் தான் சபாநாயகர். அவர் எங்களை எல்லாம் அவையை விட்டு வெளியேற்றிவிட்டர். சபாநாயகர் உத்தரவை மீறி எதிர்த்து நாங்கள் வாக்களித்தால் பதவி பறிபோய்விடும்.
அப்போது காங்கிரஸ் உறுப்பினர்கள் 66 பேர் இருந்தனர். அவர்களை ஜெயலலிதாவை ஆதரிக்கச் சொல்ல மூப்பனாருக்கு டெல்லியிலிருந்து உத்தரவு வந்தது. அதனால் எங்கள் பலம் கூடிவிட்டது. 3 நாளில் ஜானகி அம்மா ஆட்சி கவிழ்ந்தது. இரட்டை இலை சின்னம் யாருக்கு என உரிமை பிரச்சினை எழுந்தது. அப்போது ஜெயலலிதா சேவல் சின்னத்தில் நின்றார். ஜானகி இரட்டைப் புறா சின்னத்தில் நின்றார். நால்வர் அணி என்று அரங்கநாதன், திருநாவுக்கரசர் என ஒரு அணியாகப் போட்டியிட்டது. ஆக, அதிமுகவுக்குள் ஓட்டுகள் மூன்றாகப் பிரிந்தன. அதில் ஜெயலலிதா அணி மட்டும் வென்றது. பிறகு ஜானகி அரசியலைவிட்டு ஒதுங்கிவிட்டார்.
அப்போதும் கூட திமுக அந்தத் தேர்தலில்கூட மிகப்பெரிய ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியை எல்லாம் பெறவில்லை. 1000 ஓட்டுகளில் தோல்வி அடைந்த அதிமுக வேட்பாளர்கள் 21 பேர். 2 ஆயிரம் ஓட்டில் தோற்றவர்கள் 42 பேர். 5 ஆயிரம் ஓட்டுகளில் தோற்றவர்கள் 91 பேர். அப்படித்தான் திமுக ஆட்சி 1989இல் வந்தது. ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவரானார். சட்டசபையில் என்ன நடந்தது என்று உலகத்திற்கே தெரியும்.
1989 மார்ச் 25 அன்று ஜெயலலிதா ராஜினாமா கடிதம் கொடுத்தார். அது அவரது கைப்பட எழுதப்பட்ட கடிதம் இல்லை. நாங்கள் சொன்ன பிறகு கடிதத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ள ஜெயலலிதா சம்மதித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ராஜினாமா கடிதம் கொடுத்தால் சபாநாயகர் சட்டப்படி அவரை நேரில் அழைத்து உண்மையா என விசாரிக்க வேண்டும். அவர் கைப்பட கொடுத்த கடிதமா என உறுதி செய்ய வேண்டும். அந்த விதியை பின்பற்றாமல் சபாநாயகர் ஜெயலலிதா ராஜினாமாவை அறிவிக்க முயன்றார்.
அப்போதுதான் மோதல் நடந்தது. அதில் ஜெயலலிதா தாக்கப்பட்டார். அவரை தேவி மருத்துவமனையில் சேர்த்தோம். அதன்பின்னர் 'மீண்டும் முதல்வராகத்தான் இந்த அவைக்கு வருவேன்' என்று அறிக்கை கொடுத்தார். சட்ட சபையில் நடந்த விவகாரம் பற்றி நிறையப் பொதுக்கூட்டங்கள் நடத்தினோம். அதில் ஜெயலலிதா பேசினார். அதிமுக சார்பில் அண்ணாசாலையில் எம்ஜிஆருக்கு சிலை திறந்தோம். அதை ராஜீவ்காந்திதான் திறந்துவைத்தார். அதற்கு 3 லட்சம் பேர் கூடினார்கள். அதைப் பார்த்த பின் அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதியானது. பிறகு ராஜீவ்காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். ஜெயலலிதா சபதம் போட்டதைப் போல முதல்வராகச் சட்டசபைக்குள் காலடி எடுத்து வைத்தார்" என்று பல விசயங்களைப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications