Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைக்கு பிறகே சாத்தனூர் அணை திறப்பு! துரைமுருகன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 5 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட பிறகுதான் சாத்தனூர் அணை திறக்கப்பட்டுள்ளது என தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கமளித்துள்ளார். இந்த அணையை முன்னெச்சரிக்கையாக திறந்துவிட்டதால்தான் பெரும் உயிர் சேதம் தடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து முன்னறிவிப்பு இல்லாமல் திடீரென வினாடிக்கு 1.68 லட்சம் கன அடி தண்ணீரை வெளியேற்றியதால் 4 மாவட்ட மக்கள் பாதிக்கப்பட்டனர் என உண்மைக்கு புறம்பான தகவல் பரப்பப்படுகிறது.

duraimurugan sathanur dam fengal cyclone

பெஞ்சல் புயலால் நீர்பிடிப்பு பகுதியில் பெரும் மழை பொழிவால் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. அணையின் முழு கொள்ளளவான 119 அடியை நெருங்கியது. தண்ணீர் வரத்தை முன்கூட்டியே கணித்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த தண்ணீர் தென் பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

சாத்தனூர் அணை நீர் திறப்பு பற்றி பொய்யான தகவல்களை பரப்பி சிலர் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறார்கள். வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி சாத்தனூர் அணையின் வெள்ளப்பெருக்கு விதிகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்த விதிகளின் 2ஆவது பிரிவில் சாத்தனூர் நீர்த்தேக்கத் திட்டங்களில் வெள்ளம் ஏற்படும் போது கடைப்பிடிக்க வேண்டிய நிலையான உத்தரவுகள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படிதான் தொடர்ந்து முன்கூட்டியே கணித்து 5 வெள்ள அபாய எச்சரிக்கைகள் விடப்பட்டன.

duraimurugan sathanur dam fengal cyclone

நீர் வெளியேற்றப்படும் போது கரைகளில் உள்ள கொளமாஜனூர், திருவாதனூர், புதூர் செக்கடி, ராயண்டபுரம், அகரம்பள்ளிப்பட்டு, தொண்டமானூர் உள்ளிட்ட பல கிராமங்களின் பெயர்களை சாத்தனூர் அணையின் உதவி செயற்பொறியாளர் குறிப்பிட்டு வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்தார். ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள், இழப்புகளைத் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கடிதம் மூலம் கேட்டுக் கொண்டார்.

உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. வெள்ளம் வெளியேறிய போது அனைத்து சாலைகள், நெடுஞ்சாலைகளில் உள்ள தரைப்பாலங்கள் மீது வாகன போ்குவரத்து நிறுத்தப்பட்டது.சாத்தனூர் அணையின் உதவி செயற்பொறியாளர் அணைக்கு வரும் நீரின் அளவை தொடர்ந்து கண்காணித்து அவ்வப்போது எச்சரிக்கைகளையும் செய்து வந்தார்.

duraimurugan sathanur dam fengal cyclone

அது அரசின் கவனத்திற்கு வந்த உடனே முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன. பெஞ்சல் புயல் நவம்பர் 30ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் கரையை கடந்த போது விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூரி, செங்கல்பட்டு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத அதீத கனமழை பெய்தது.

விழுப்புரம் மாவட்டத்தில் 1ம் தேதி அதிகபட்சமாக 23.10 செ.மீ. மழையும், 2ம் தேதி 18.50 செ.மீ. மழையும் மொத்தம் இரு நாட்களில் 41.60 செ.மீ.மழையும் பெய்தது. அதே போல் தென்பெண்ணையாற்றின் மேற்புற நீர்ப்பிடிப்பு பகுதிகளான கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் இதுவரை கண்டிராத அளவிற்கு அதிகபட்சமாக மழை பெய்தது.

குறிப்பாக ஊத்தங்கரையில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 50 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவானது. தென்பெண்ணையாற்றின் குறுக்கே உள்ள முக்கிய நீர் தேக்கங்களான கிருஷ்ணகிரி மற்றும் சாத்தனூர் அணைகள் ஏற்கெனவே முழுக் கொள்ளளவை எட்டியிருந்தது.

பெஞ்சல் புயலால் பெய்த அதீத மழையால் தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிவிரைவாக அதிகரிக்க தொடங்கியது. சாத்தனூர் அணையின் மொத்த கொள்ளளவான 119 அடியில் 110 அடியை கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி எட்டியதை தொடர்ந்து முதல் கட்டமாக வெள்ள அபாய எச்சரிக்கை சாத்தனூர் அணை உதவி செயற்பொறியளரால் நீர் வெளியேற்றும் விதிகளின்படி அறிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அணைக்கு நீர் வரத்து தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருந்தது. சாத்தனூர் அணை நீர் மட்ட அளவானது படிப்படியாக 110 அடியிலிருந்து உயர்ந்து 117.55 அடியாக நவம்பர் 30 ஆம் தேதி வரை பராமரிக்கப்பட்டது. பெருமழை பெய்ததை தொடர்ந்து நீர்வரத்து அதிகமானதால் 5ஆவது வெள்ள அபாய எச்சரிக்கை டிசம்பர் 2 ம் தேதி பகல் 2.45 மணிக்கு விடப்பட்டு வினாடிக்கு 1.80 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

அதிகப்படியான மழையின் காரணத்தை புரிந்து கொள்ளாமல் பொய்யான தகவலை பரப்புகிறார்கள். பெருமழையால் சாத்தனூர் அணைக்கு ஆபத்து ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு செயல்பட்டது. அணைக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால் என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கும்? பொருட்சேதங்களையும் உயிர் சேதங்களையும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

அப்படியான ஆபத்து ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாகத் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரால் பெரிய அளவில் பாதிப்புகளோ உயிர் இழப்புகளோ ஏற்படாமல் அரசு மக்களை பாதுகாத்தது. சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் தொடர்பாக அடுத்தடுத்து எச்சரிக்கைகளை அரசு சொல்லிக் கொண்டே இருந்தது.

பெஞ்சல் புயலின் போக்கை புரிந்து கொண்டால் ஏன் சாத்தனூர் அணையில் இருந்து அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டது என்பதற்கான காரணமும் புரியும். உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு விவசாய நிலங்கள் மட்டுமே வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனை புரிந்து கொள்ளாமல் உயிர்கள் விஷயத்திலும் எதிர்க்கட்சிகள் மன சாட்சியை அடகு வைத்துவிட்டு அவதூறுகளை மட்டுமே அள்ளி வீசுகின்றன. பொய்கள் எப்போதுமே விலை போகாது. இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+