உதயநிதியால் 'இந்த' நிலை விரைவில் மாறும்! நீட் ரத்து உண்ணாவிரத போராட்டத்தில் முழங்கிய துரைமுருகன்
சென்னை: நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி மதுரை தவிர தமிழ்நாடு முழுவதும் இன்று திமுகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் இந்த போராட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றி அமைச்சர் துரைமுருகன், "உதயநிதியால் நீட் தேர்வு ரத்து என்ற நிலை ஏற்படும்" என்று கூறியுள்ளார்.
மருத்து கல்விக்கான நுழைவு தேர்வாக இருக்கும் நீட்டை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு முழுவதும் மாணவர்களும், பெற்றோரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசும் இது தொடர்பான மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்திருக்கிறது. ஆனால் தற்போது வரை இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பெற்றோர் ஒருவர் நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு எப்போது ஒப்புதல் அளிப்பீர்கள் என்று கேள்வியெழுப்பினார்.

இந்த மசோதாவுக்கு ஒருபோதும் ஒப்புதல் அளிக்க மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி இதற்கு பதிலளித்திருந்தார். ஆளுநர் இவ்வாறு பதிலிளித்த அடுத்தடுத்த நாட்களில் நீட் தேர்வில் வெற்றி பெற்றும் அரசு கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்காததால் சென்னையை சேர்ந்த மாணவரும் அவரது தந்தையும் அடுத்தடுத்து தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்தனர். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுகவினர் இன்று உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதிமுக பொன்விழா மாநாடு நடைபெறும் மதுரையை தவிர அனைத்து மாவட்டங்களிலும் இந்த போராட்டம் நடைபெறுகிறது. அந்தந்த மாவட்டங்களில் பொறுப்பு அமைச்சர்கள் இந்த போராட்டத்தை தொடங்கி வைக்கின்றனர். சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் இந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வைக்கிறார்.
இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் மற்றும் சென்னையை சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மேயர் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் உரையாற்றிய அமைச்சர் துரைமுருகன்,"நீட் தேர்வுக்கு எதிராக திமுக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு நீட் தேர்வை கல்வியாளர்கள் பலர் எதிர்க்கின்றனர். ஆனால் மோடி அரசு அதனை கண்டுகொள்ளாமல் உள்ளது.
ஒட்டுமொத்த இந்தியாவில் நாம் மட்டும்தான் நீட் தேர்வை எதிர்த்து வருகிறோம். ஏனென்றால், இது எதிர்காலத்தை சீரழிக்கும் என்ற வருங்கால சிந்தனை நமக்கு உண்டு. உதயநிதியால் நீட் தேர்வு ரத்து என்ற நிலை ஏற்படும்" என்று கூறியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் இந்த உண்ணாவிரத போராட்டம் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications