செந்தில்பாலாஜி பற்றிய கேள்வி! ''என் விஷயத்தை மட்டும் கேளுங்க! ஆள விடுங்கப்பா'' -அமைச்சர் துரைமுருகன்
சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி பற்றிய கேள்விக்கு பதிலளிக்க மறுத்த அமைச்சர் துரைமுருகன், தன் விஷயத்தை மட்டும் தன்னிடம் கேட்குமாறு செய்தியாளர்களிடம் பளிச்சென்று கூறிவிட்டார்.
மேலும், ஆள விடுங்கப்பா எனக் கூறி செந்தில்பாலாஜி குறித்த கேள்விக்கு எந்த பதிலும் அளிக்காமல் நழுவிக்கொண்டார். ஏற்கனவே அமைச்சர் கே.என்.நேருவும் இதேபோல் செந்தில்பாலாஜி குறித்த கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்துக்கொண்டார். அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், சேகர்பாபு போன்ற ஓரிரு அமைச்சர்கள் மட்டுமே செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தை பொறுத்தவரை சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு பல ட்விஸ்ட்கள் அரங்கேறின. ரெய்டு, விசாரணை, கைது, நெஞ்சு வலி, மருத்துவமனையில் அனுமதி, அறுவைச் சிகிச்சை, வழக்கு, ஓய்வு என பல திருப்புமுனைகள் நிகழ்ந்தன.
இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்காக மூத்த வழக்கறிஞரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான என்.ஆர். இளங்கோ தான் மிகக் கடுமையாக நீதிமன்றத்தில் வாதாடி வருகிறார். ஊடகங்களில் அவருக்கு பக்கபலமாக பேட்டிகள் கொடுத்து வருகிறார். மற்றவர்களை பொறுத்தவரை நமக்கேன் வம்பு என்கிற வகையில் செந்தில்பாலாஜி விவகாரத்தை வேடிக்கை மட்டுமே பார்த்து வருகின்றனர்.
இதனிடையே மூத்த அமைச்சர், திமுக பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் செந்தில்பாலாஜி குறித்து துரைமுருகன் ஏதேனும் கருத்துக் கூறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆள விடுங்கப்பா என ஓபனாக செய்தியாளர்களிடம் கூறிவிட்டு நழுவிக்கொண்டார். ஆனால் அதே வேளையில் நீர்வளத்துறை சார்ந்த அனைத்து கேள்விகளுக்கும் புள்ளிவிவரத்துடன் கூடிய பதிலையும், விளக்கத்தையும் அவர் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications