கருணாநிதிக்கு 10 ஆண்டுகள் என் ஜாதி தெரியாது! ஸ்டாலினை சுமப்பதில் எனக்கு வெட்கமில்லை! -துரைமுருகன்
சென்னை: கருணாநிதிக்கு 10 ஆண்டுகள் எனது ஜாதியே தெரியாது என திமுக பொதுச்செயலாளரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் வேலூர் மாவட்டம் காட்பாடியில் நேற்றிரவு நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன் பழைய நினைவலைகளில் மூழ்கினார்.
1961 ஆம் ஆண்டு முதல் 1971 ஆம் ஆண்டு வரை கருணாநிதிக்கு எனது ஜாதி தெரியாது என்றும் ஜாதிபார்க்காமல் என்னுடன் பழகியவர், என்னை வளர்த்துவிட்டவர் கருணாநிதி எனவும் துரைமுருகன் உருகினார்.

ஸ்டாலின் சின்னப்பிள்ளையாக இருக்கும் போதே தாம் கோபாலபுரம் சென்றிருப்பதாகவும், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஸ்டாலினை பார்த்து ''ஓய் இங்கே வா'' என தாம் அழைத்தால் அவர் பயந்து ஓடி விடுவார் எனவும் பழைய பிளாஷ்பேக்கை கூறினார்.
தோளில் தூக்கி வளர்த்து தோழனாகி, இன்று தலைக்கு மேல் வளர்ந்து தனக்கே தலைவனாகி இருக்கிறார் ஸ்டாலின் என பஞ்ச் அடித்த துரைமுருகன் ஸ்டாலினை தோளில் சுமப்பதில் நான் ஏன் வெட்கப்பட வேண்டும் என வினவினார்.
ஜாதி பார்க்காமல் தன்னுடன் பழகி தன்னை வளர்த்துவிட்டவர் கருணாநிதி என்றும் அவர் பிள்ளைக்கு பக்க பலமாக அவரை சுமந்து நிற்க தனக்கு வெட்கமேயில்லை எனவும் துரைமுருகன் தெரிவித்தார்.

இதனால் தான் தன்னை கோபாலபுரத்து விசுவாசி என்று தாமே கூறியதாகவும் அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார்.
வெறுமனே பட்ஜெட் வரவு செலவு திட்ட அறிவிப்புகளை மட்டும் பேசினால் மக்கள் அதை ரசிக்க மாட்டார்கள் என்பதால் கூடவே சில பிளாஷ்பேக் கதைகளையும் தனது பேச்சில் சேர்த்துக்கொண்டார் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications