செல்லூர் ராஜு வைத்த கோரிக்கை.. உடனே அமைச்சர் எவ வேலு கொடுத்த பதிலால் சட்டசபையில் சிரிப்பலை!
சென்னை: மதுரையில் போக்குவரத்து நெரிசல் குறித்தும், கோரிப்பாளையம் பாலம் பணிகள் குறித்தும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் கேள்விக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார். அப்போது, 'செல்லூர் ராஜுவின் வீட்டுக்கே சென்றேன்.. ஆனால் அவர் பங்களா கட்டிக்கொண்டு எங்கோ பண்ணை வீட்டில் இருக்கிறார் எனச் சொன்னார்கள்' என அமைச்சர் எவ வேலு பேசியது சட்டப்பேரவையில் கலகலப்பை ஏற்படுத்தியது.
தமிழக சட்டசபையில் இன்று, மதுரை போக்குவரத்து நெரிசல் குறித்தும், சாலைகளில் மோசமான நிலை குறித்தும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பினார். செல்லூர் ராஜு பேசுகையில், "மதுரை மாநகரில் இரண்டு முக்கியமான பாலம் வேலைகள் எப்போது முடியும்? மதுரை மக்கள் சர்க்கஸ்ல பயணிக்குற மாதிரி இருக்கு.. மக்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும்?" எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, "ஏற்கெனவே 10 ஆண்டுகாலம் விடிவுகாலம் இல்லாததால், விடிவுகாலம் உருவாக்குவதற்காக தமிழக முதல்வர் மதுரைக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார். முன்பு அமைச்சராக இருந்த செல்லூர் ராஜு, மதுரை நகர் பகுதியை சார்ந்தவர். கடந்த முறை நான் மதுரை சென்றபோது, அவரின் வீட்டுக்கே சென்றேன். அவர் பங்களா கட்டிக்கொண்டு எங்கோ பண்ணை வீட்டில் இருக்கிறார் எனச் சொன்னார்கள்.
கோரிப்பாளையத்தில் உள்ள வீட்டுக்கு சென்று வர சங்கடமாக உள்ளதாக செல்லூர் ராஜு என்னிடம் தொலைபேசியில் சொன்னார். அமைச்சராக இருந்தவர் சங்கடப்பட கூடாதே, இதற்கு என்ன செய்யலாம் என யோசித்து ஒரு நாள் காலை நடைபயிற்சி செல்லும்போது நானும், அமைச்சர் மூர்த்தியும் அவரின் வீடு உள்ள பகுதிக்கே சென்று பார்த்தோம்.
கோரிப்பாளையம் பகுதியில் பாலம் அமைக்க நூறாண்டு காலமாக பிரச்சனை இருந்தது. அழகர் ஆற்றில் இறங்க மண்டகபடி உள்ளதாக ஒரு சாரார் சொன்னார்கள், முத்துராமலிங்க தேவர் சிலையும் அப்பகுதியில் இருந்தது. இது சார்ந்தவர்களிடம் பேசி ஒரு முடிவெடுத்து இந்த பாலம் அமைக்க அடிக்கல் நாட்டி பணிகள் நடந்து வருகிறது. இயற்கையான காரணங்களால் சில இடர்பாடுகள் உள்ளன. ஜனவரி மாதத்துக்குள் அந்த பாலத்தை திறக்கும் வகையில் பணிகளை துரிதமாகச் செய்து வருகிறோம்.
நெரிசல் உள்ள பகுதியான அப்பல்லோ மருத்துவமனை பாலத்தை நவம்பர் மாதமே திறக்க திட்டமிட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த இரு பாலப் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. மதுரை மேற்கு தொகுதியில் இன்னொரு பாலமும் கட்டி வருகிறோம். இந்த பாலப் பணிகள் முடிவடைந்ததும் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது. வைகை வடகரை பாத்திமா கல்லூரி முதல் புறவழிச்சாலை, இணைப்புச்சாலைக்கும் ஏற்பாடு செய்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications