குவைத்திலிருந்து கொச்சிக்கு வந்த உடல்கள்! கேரளா சென்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான்..முதல்வருடன் சந்திப்பு
குவைத் நாட்டில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த ஏழு தமிழர்களின் உடல் கொச்சி கொண்டு வரப்படும் நிலையில் அவர்களது உடல்களை பெற்றுக் கொள்வதற்காக கொச்சிக்கு சென்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார்.
குவைத்தின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் பேங்காஃப் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தின் பணிகள் நடைபெற்று வந்தன. அதில் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர்.

இந்நிலையில் குவைத் நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய அந்த தீ கட்டிடத்தின் பல பகுதிகளுக்கும் பற்றியது.
அந்த கட்டிடத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி இருந்த நிலையில் அவர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டது. இந்த விபத்தில் சுமார் 40 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பலியானோர் எண்ணிக்கை 50ஆக அதிகரித்தது.. அவர்களில் கேரளாவைச் சேர்ந்த 23 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 பேரும் உயிரிழந்தனர். எஞ்சிய 15 பேரும் ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், குவைத் தீ விபத்தில் உயிரிழந்த 45 இந்தியர்களின் உடல்களை நாட்டுக்கு கொண்டு வர இந்திய அரசு சார்பில் சிறப்பு விமானம் அனுப்பி குவைத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்காக மத்திய இணை அமைச்சர் கேவி சிங் குவைத் சென்று, காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார். இதனையடுத்து 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்களின் உடல்களுடன் குவைத்தில் இருந்து இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் இன்று அதிகாலை கொச்சி நோக்கிப் புறப்பட்டது.
கொச்சியில் இருந்து தமிழ்நாடு, ஆந்திரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அம்மாநில அரசு அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் உயிரிழந்தோர் உடல்கள் கொண்டு செல்லப்பட்டு சொந்த ஊர்களில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் தீ விபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடியைச் சேர்ந்த வீரசாமி மாரியப்பன், கடலூரைச் சேர்ந்த சின்னத்துரை கிருஷ்ணமூர்த்தி, சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சிவசங்கரன் கோவிந்தன், திண்டிவனத்தைச் சேர்ந்த முகமது ஷெரீப், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பன் ராமு, திருச்சியைச் சேர்ந்த ராஜு எபநேசன், பேராவூரணியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராய் ஆகியோரின் உடல்கள் கொச்சி கொண்டுவரப்படுகிறது.
அவர்களின் உடல்களை பெற்றுக் கொள்வதற்காக தமிழ்நாடு செயலக தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சென்னையில் இருந்து கொச்சி சென்றார். தொடர்ந்து கொச்சி விமான நிலையத்தில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து பேசினார். தொடர்ந்து கொச்சியில் இந்திய விமானப்படை சிறப்பு விமான மூலம் கொண்டு வரப்படும் 7 தமிழர்களின் உடல்களை தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெற்றுக் கொள்கிறார். இதனையடுத்து 7 பேரின் உடல்களும் ஏழு வாகனங்களில் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications