எதுவும் நிலுவையில் இருக்கக் கூடாது! எல்லா பணிகளும் மளமளவென நடக்கணும்! ஐ.பெரியசாமி போட்ட ஆர்டர்!
சென்னை: ஊரக வளர்ச்சித் துறையில் நிலுவையில் இருக்கும் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார் அமைச்சர் ஐ.பெரியசாமி.
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அந்த துறையின் இரண்டாவது ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், ஊராட்சித் துறை திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் விவரமாக கேட்டறிந்தார்.
பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி விடுவித்தல், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், என பல திட்டங்களின் பணிகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.
அனைத்தையும் விவரமாக கேட்டுக்கொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி, சட்டமன்றத்தில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகளை நிலுவையில் வைக்காமல் முன்னுரிமை கொடுத்து முதலில் செய்து முடிக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தியிருக்கிறார்.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 2021-22ஆம் ஆண்டில் 9,480 பணிகள் எடுக்கப்பட்டு இதுவரை 4,549 பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 4,931 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளுர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 4,664 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, இதுவரை 3,601 பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள 1,063 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளதாகவும் எடுத்துக் கூறியிருக்கின்றனர்.
எல்லாவற்றையும் மிகுந்த பொறுமையாக கேட்டுக்கொண்ட அமைச்சர் ஐ.பெரியசாமி, ஊரகப்பகுதிகளில் உள்ள அனைத்து மக்களுக்கும் குடிநீர், தெருவிளக்கு, சாலைப்பணிகள் உட்பட அரசின் வளர்ச்சித் திட்டங்கள் உரிய நேரத்தில் சென்றடையும் வகையில் கூடுதல் ஆட்சியர்கள், இயக்குநர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் சிறப்பு கவனம் செலுத்தி முனைப்புடன் பணியாற்றிட வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
இதனிடையே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வானையத்தின் மூலம் ஊரக வளரச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு நேரடி நியமனம் வழி தேர்ச்சிபெற்ற 4 பயிற்சி உதவி இயக்குநர்களுக்கு பயிற்சி மற்றும் பணி நியமன ஆணைகளை அமைச்சர் பெரியசாமி வழங்கினார்.












Click it and Unblock the Notifications