தலைமை செயலகத்தில் ஓபிஎஸ் யாகம் நடத்தியதை யாராவது பார்த்தீர்களா?.. அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி
சென்னை: தலைமை செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் யாகம் நடத்தியதாக கூறுவது வதந்தியே என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தலைமை செயலகத்தில் உள்ள தனது அறையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் யாகம் நடத்தியதாக தகவல் பரவியது. அறை புதுப்பிக்கப்படாததால் இது போன்ற யாகம் நடத்தியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால் ஸ்டாலினோ இது அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்ட வதந்தி என விமர்சனம் செய்தார். மேலும் யாகம் நடத்தியது ஏன் என்பதை ஓபிஎஸ் விளக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

ஆதாரம் இருக்கா
இதுகுறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் தலைமை செயலகத்தில் யாகம் நடத்தியதை யாரேனும் பார்த்தார்களா? யாகம் நடத்தியதற்கான ஆதாரம் ஏதேனும் இருக்கிறதா?. கட்சிக்குள் பிளவு ஏற்படுத்த தினகரனும் ஸ்டாலினும் சேர்ந்து செய்யும் சதிதான் இது.

அகராதியில்
காலை எழுந்துவுடன் அரசுக்கு எதிராக என்ன சூழ்ச்சி செய்யலாம் என எதிரிகள் எண்ணுகிறார்கள். கெடுவான் கேடு நினைப்பான் என்ற பழமொழிக்கேற்ப எதிரிகள் கெட்டு போவார்கள். எடுபிடி, துதிபாடுவது, அடிமை சாசனம் இவையெல்லாம் அதிமுகவின் அகராதியில் இல்லை.

ஸ்டாலினுக்கு அரசியல் தெரியவில்லை
மம்தா கண்ணில் சுண்ணாம்பை வைத்துவிட்டு ராகுல் கண்ணில் வெண்ணெய் வைக்கிறார் ஸ்டாலின். ஸ்டாலினுக்கு அரசியல் தெரியவில்லை , கட்சியை எப்படி நடத்துவது என தெரியாமல் நடத்தி கொண்டிருக்கிறார்.

பதில் சொல்ல முடியாது
எங்களை போல் நீந்த தெரிந்தவர்களுக்கு ஆழம் பற்றி கவலையில்லை, ஸ்டாலினுக்குதான் கவலை. ஸ்டாலின் கூறிய யூகங்களுக்கெல்லாம் எங்களால் பதில் சொல்ல முடியாது என்றார் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications