என்ன செய்வீங்களோ தெரியாது! இதெல்லாம் நடக்கனும்! ஹெட் மாஸ்டர்களுக்கு பாடம் எடுத்த அமைச்சர் கயல்விழி!
சென்னை: பழங்குடியினர் நலப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களை அழைத்து கூட்டம் நடத்தி பாடம் எடுத்திருக்கிறார் அமைச்சர் கயல்விழி செல்வராஜ்.
நாளை மறுநாள் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் சூழலில் இன்று இந்தக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்.
பழங்குடியினர் நலப் பள்ளிகளுக்காக அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

பழங்குடியினர்
அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் இன்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் கயல்விழி, பழங்குடியின மக்களுக்கு கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு தலைமை ஆசிரியர்களை கேட்டுக்கொண்டார்.

அமைச்சர் கயல்விழி
மேலும், வருபவர்கள் வரட்டும் போகிறவர்கள் போகட்டும் என வேடிக்கை பார்க்காமல் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்கவும், பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர் இடைநிற்றலை தவிர்க்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கட் அண்ட் ரைட்டாக அமைச்சர் கயல்விழி ஆர்டர் போட்டார்.

நாளை மறுநாள்
நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் பள்ளி மற்றும் விடுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தி பள்ளிகளை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியதுடன் தாம் திடீர் விசிட் அடிப்பேன் எனவும் எச்சரித்துள்ளார். அதேபோல் பழங்குடியினர் உண்டி உறைவிடப்பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கு தகுந்த ஆலோசனை வழங்கி அவர்கள் உயர்கல்வி படிப்பில் சேருவதை உறுதி செய்ய வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு புதிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறார்.

விளையாட்டு ஆர்வம்
பழங்குடியினர் பள்ளி தானே என்று எண்ணாமல், அந்தப் பள்ளிகளில் பயிலும் மாணாவர்களிடையே விளையாட்டு மீதான ஆர்வத்தினை ஏற்படுத்தி விளையாட்டில் மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொண்டுவரவும் தலைமை ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அறிவுரை வழங்கி அவர்களை அனுப்பி வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications