சொத்து வரி உயர்வு சர்ச்சை! 15-வது நிதிக்குழு கடிதத்தை சுட்டிக்காட்டி அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!
சென்னை: மத்திய அரசின் 15-வது நிதிக்குழு வழிகாட்டுதல் படியே தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நேரு விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் 7% வீடுகளுக்கு மட்டுமே 100% முதல் 150% வரை சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கடந்த 1987 மற்றும் 1993-ம் ஆண்டுகளில் நடைபெற்ற அதிமுக ஆட்சியின் போது 300% சொத்து வரி உயர்த்தப்பட்டதாக அமைச்சர் நேரு தெரிவித்தார்.

சொத்து வரி
தமிழகத்தில் சொத்துவரி உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிமுக இன்று தமிழகம் முழுவதும் சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் கூட நடத்தி முடித்திருக்கிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நேரு, நாட்டின் மற்ற மாநிலங்களில் உள்ள மாநகரங்களை காட்டிலும் தமிழக மாநகரங்களில் சொத்து வரி மிக குறைவு எனக் கூறினார்.

பணம் முக்கியம்
மேலும், பணம் இல்லாமல் அரசாங்கத்தால் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது என்றும் மக்களுக்கு சேவை செய்யவும் அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவுமே வரி வசூலிக்கப்படுவதாக விளக்கம் அளித்தார். சொத்து வரி உயர்வால் திமுகவுக்கும் சரி தமிழக அரசுக்கும் சரி எந்த பின்னடைவும் ஏற்படாது என்றும் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பால் விலை உயர்த்திவிட்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தொலைக்காட்சியில் உரையாற்றியது போல் இல்லாமல் ஏழைகளுக்கும், வசதி படைத்தோருக்கும் மாறுபட்ட அளவில் சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

சமையல் எரிவாயு
சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தும் அதிமுக பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தோ, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தோ ஏன் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை என கேள்வி எழுப்பினார். கடந்த 1987 மற்றும் 1993-ம் ஆண்டுகளில் நடைபெற்ற அதிமுக ஆட்சியின் போது 300% சொத்து வரி உயர்த்தப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

3 மாதங்களுக்கு ஒரு முறை
இதனிடையே 6 மாதங்களுக்கு ஒரு முறை சொத்து வரி செலுத்தும் முறையை முதலமைச்சரிடம் எடுத்துக்கூறி ஆலோசித்து, இனி 3 மாதங்களுக்கு ஒரு முறை செலுத்தக் கூடிய வகையில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நேரு உறுதியளித்தார். இதன் மூலம் சொத்து வரி கட்டுவோரின் சுமை குறையும் எனவும் தெரிவித்தார். சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த அதேவேளையில் அமைச்சர் நேரு சுடச்சுட விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications