அங்க பாரு தூங்குறாரு அவரை எழுப்புயா! எந்த ஊர்யா நீ? அதிகாரியை காய்ச்சி எடுத்த அமைச்சர் கே.என்.நேரு!
சென்னை: அரசு நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருக்கும் போது அதிகாரி ஒருவர் தூங்கி வழிந்ததை கண்ட அமைச்சர் கே.என்.நேரு, தனது பேச்சை நிறுத்திவிட்டு அந்த நபரை ஓபன் மைக்கிலேயே காய்ச்சி எடுத்தார்.
தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டம் 2022 மற்றும் விதிகள் 2023 தொடர்பான பயிலரங்கம் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. அதில் அனைத்து மாநகராட்சி ஆணையாளர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் இயக்குநர்கள் மற்றும் நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) சட்டத்தை அமல்படுத்துவது பற்றி தொண்டை தண்ணீர் வற்ற பேசிக்கொண்டிருந்தார் அமைச்சர் நேரு. அப்போது அதிகாரி ஒருவர் சற்று கண் அயர்ந்து தூங்கியதை பார்த்த நேரு கடுமையாக கோபம் கொண்டார்.
அங்க பாரு தூங்குறாரு அவரை எழுப்புயா என டென்ஷன் ஆன நேரு, எந்த ஊர்யா நீ? நல்லாயிருக்காது என லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார். நூறு பேரு இருக்கிற இடத்தில் ஏன் இப்படி நடந்துக்கிறீங்க என நொந்துகொண்டு மீண்டும் தனது பேச்சை தொடர்ந்தார்.
இந்த நிகழ்வுக்கு பிறகு அசந்து போய் அமர்ந்திருந்த அதிகாரிகள் கூட நிமிர்ந்து அமர்ந்து அமைச்சர் நேருவின் பேச்சை கேட்க ஆரம்பித்தனர். கீழே இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள், தனது பேச்சை கவனிக்கிறார்களா என்பதில் அமைச்சர் நேரு எப்போதுமே கவனமாக இருப்பார். இது அவரை பற்றி அறிந்த திருச்சி மாவட்ட அரசு அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும்.
பார்க்காதது போல் தான் இருக்கும், திடீரென கண்டுபிடித்து கடிந்துகொள்வார். சில மாதங்களுக்கு முன்பு கூட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், பேசிக்கொண்டிருக்கும் போது செல்போனை பார்த்துக் கொண்டிருந்த உதவி செயற்பொறியாளரை உண்டு இல்லை என செய்துவிட்டார்.
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால், முதலில் கோபத்தில் அவரை எழுப்புயா, எந்த ஊர்யா நீ என ஒருமையில் பேசிய நேரு, பிறகு என்ன நினைத்தாரோ சுதாரித்துக்கொண்டு ஏங்க, வாங்க போங்க என டோனை மாற்றிக்கொண்டார்.


Click it and Unblock the Notifications
