அதிகாலையிலேயே மெரினாவுக்கு போன மா.சு., ககன்தீப் சிங் பேடி, ராதாகிருஷ்ணன்.. செய்த சூப்பர் காரியம்
சென்னை : இன்று அதிகாலையிலேயே சென்னை மெரினா கடற்கரைக்கு போன அதிகாரிகளுடன் போன அமைச்சர் மா சுப்பிரமணியன் அங்கிருந்த நெறிக்குறவர்கள் மற்றும் வீடற்றவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வைத்தார். தடுப்பூசி செலுத்திக்கொண்ட அவர்கள், தாங்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதை இந்தி சேனலில் காட்டுமாறு கோரிக்கை வைத்தனர்.
தடுப்பூசி போடுவதன் மூலமே கொரோனாவை வெல்ல முடியும் என்பதால் அந்த விஷயத்தில் தமிழக அரசு அதிக ஆர்வம் காட்டுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துவிட்ட நிலையில், மூன்றாவது அலை தலை தூக்காமல் இருப்பதற்கு மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்த வேண்டியது அவசியம் ஆகும்.
இதை உணர்ந்தே தமிழக அரசு கடந்த ஒரு மாதமாக ஒவ்வொரு ஞாயிறு அன்றும் மெகா தடுப்பூசி முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்த வைக்க முயற்சித்து வருகிறது. இதற்கு மக்களிடையே நல்ல ஆதரவும் கிடைத்துள்ளது.பலரும் வரிசையில் நின்றுஆர்வமுடன் செலுத்துகிறார்கள்.

மக்கள்
இந்நிலையில் இன்னும் ஏரளமான மக்கள் தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது. ஆனால் அவர்களுக்கு தடுப்பூசி குறித்த தகவல்கள் சென்றடையவிலலை. காரணம் அடிப்படையில் அவர்கள் யாரும் ஊடகங்களை, பத்திரிக்கைகளை பார்ப்பவர்கள் இல்லை. அப்படிப்பட்டவர்களை தேடி சென்று தடுப்பூசி செலுத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது,.

மா சுப்பிரமணியன்
அதன்படியே இன்று அதிகாலையிலேயே சென்னை மெரினா கடற்கரைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் புறப்பட்டு போனார். அவருடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககத்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகளும் சென்றனர். அவர்கள் மெரினாவில் தங்கியிருந்த வீடற்றவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்தனர். அங்கிருந்த மக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

நெறிகுறவர்கள் கோரிக்கை
இதுபற்றி அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்டிருந்த பதிவில், "மெரினாவில் நூற்றுக்கணக்கான நெறிக்குறவர்கள் படுத்துறங்குவர். இன்று காலை அவர்களுக்கு தடுப்பூசி போடத்துவங்கினோம்.அப்போது நெறிக்குறவ இளைஞர் ஒருவர் " எங்களுக்கு தடுப்பூசி போடுவதை இந்தி தொலைக்காட்சியில் காட்டச்சொல்லுங்கள்,எங்களூரில் ( மகாராஷ்ட்ரா)எல்லோரும் போட்டுக்கொள்ளட்டும்"என்றார்கள் என பதிவில் கூறியுள்ளார்.

எவ்வளவு தடுப்பூசி
இதனிடையே தமிழக அரசு கொரோனா தடுப்பூசி பணிகள் குறித்து வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் முதலாவது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 12.09.2021 அன்று நடைபெற்றதில் 28.91 இலட்சம் பயனாளிகளுக்கும், இரண்டாவது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 19.09.2021 அன்று நடைபெற்றதில் 16.43 இலட்சம் பயனாளிகளுக்கும், மூன்றாவது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 26.09.2021 அன்று நடைபெற்றதில் 25.04 இலட்சம் பயனாளிகளுக்கும் மற்றும் நான்காவது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 03.10.2021 அன்று நடைபெற்றதில் 17.40 இலட்சம் பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் 87,80,262 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இரண்டு தவணை
இதுவரை (07.10.2021) தமிழ்நாட்டில் 5,01,30,323 பயனாளிகளுக்கு அரசு மற்றும் தனியார் மையங்களின் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 3,73,18,608 பயனாளிகளுக்கும் (64%) மற்றும் இரண்டாவது தவணையாக 1,28,11,715 பயனாளிகளுக்கும் (22%) செலுத்தப்பட்டுள்ளது. ஐந்தாவது மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 10.10.2021 அன்று நடைபெற உள்ளது.

எதிர்ப்பு சக்தி
தற்போது 50.12 இலட்சம் கொரோனா தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. அடுத்து வரும் மூன்று நாட்களில் சுமார் 6 இலட்சம் பயனாளிகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டாலும் ஐந்தாவது சிறப்பு முகாமிற்கு சுமார் 44 இலட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. எனவே, சுமார் 30 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது மூன்றாம் முறையாக மக்களிடையே உள்ள கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி குறித்த ஆய்வு (Sero Surveillance Survey) நடத்தப்பட்டதில் விருதுநகர், தென்காசி மற்றும் சென்னை ஆகிய 3 மாவட்டங்களில் 80% அதிகமாகவும் பெரம்பலுர், அரியலுர், நீலகிரி மற்றும் கருர் மாவட்டங்களில் 60% குறைவாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, மேற்கூறிய 4 மாவட்டங்களுக்கு தடுப்பூசி பணிகளை மேம்படுத்தும் பொருட்டு அதிகமான அளவில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது" என்று அரசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications