கொரோனா கட்டுப்பாடுகள் முழு வாபஸ் இல்லை! மாஸ்க் இல்லை என்றால் அபராதமா? அமைச்சர் மா.சு விளக்கம்
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இது தொடர்பாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் சில முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
கொரோனா வேக்சின் உள்ளிட்ட மத்திய மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கைகளால் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது
அதேபோல தமிழ்நாட்டில் ஓமிக்ரான் கொரோனா காரணமாக ஏற்பட்ட கொரோனா 3ஆம் அலை, இப்போது முழுமையாகக் கட்டுக்குள் வந்துள்ளது. பல நாட்களாகவே மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 100க்கு குறைவாகவே உள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள்
இதையடுத்து மாநிலத்தில் அமலில் இருந்த பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகளை வாபஸ் பெற்று கொள்வதாகத் தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது. ஏற்கனவே, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக வாபஸ் பெறப்பட்டுள்ளன. இதற்கிடையே தமிழ்நாட்டில் இப்போது கொரோனா கட்டுப்பாடுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. இந்நிலையில், மாஸ்க் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
சென்னை திருவான்மியூரில் உள்ள இம்காப்ஸ் சித்த மருத்துவ மருந்து தயாரிக்கும் நிறுவனத்தின் 75ஆவது ஆண்டு பவள விழாவை முன்னிட்டு அதன் புதிய கட்டிடங்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார். சித்தா, யுனானி போன்ற மருத்துவத் துறைக்கான மருந்துகளைத் தயாரிக்கும் இந்த இம்காப்ஸ் மருந்து நிறுவனத்தின் பவள விழாவை முன்னிட்டு ரூ. 20 கோடி மதிப்பில் புதிய தொழிற்சாலை கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது.

செவிலியர் போராட்டம்
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "டிஎம்எஸ் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பணிநீக்கம் செய்யப்பட்ட 800 செவிலியர்களுக்கு அரசின் சார்பில் உரிய மாற்றுப் பணி விரைவில் வழங்கப்படும். போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் உரிய முன் அனுமதியைப் பெற்றுப் போராடி இருந்தால் காவல்துறையினர் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்க மாட்டார்கள்.

அம்மா மினி கிளினிக்
அம்மா மினி கிளினிக்குகளில் பணியாற்றிய மருத்துவர்களைப் பொறுத்தவரை ஏற்கனவே அவர்கள் தற்காலிக அடிப்படையில்தான் கடந்த ஆட்சியில் பணியமர்த்தப்பட்டனர். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், வரும் காலங்களில் வெளியிடப்படும் அரசின் பணி வாய்ப்புகளில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கொரோனா கட்டுப்பாடுகள்
நேற்றைய தினம் வெளியான சுகாதாரத் துறை அறிவிப்பில் பொதுச் சுகாதார சட்டத்தில் உள்ள கட்டுப்பாடுகள் திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டது. பொது இடங்களில் தடுப்பூசி கட்டாயம் என்ற கட்டுப்பாடு மட்டுமே திரும்பப் பெறப்பட்டு உள்ளது. அதேசமயம் பொது மக்கள் முக கவசம் தனிமனித இடைவெளி உள்ளிட்ட அரசின் மற்ற பிற வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்ற வேண்டும்" என்றார்.

முழுமையாக வாபஸ் எப்போது
மேலும் கொரோனா வழிகாட்டுதல்கள் முழுமையாக எப்போது வாபஸ் பெறப்படும் என்ற செய்தியாளர் கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் மா.சு, கொரோனா கட்டுப்பாடுகளைச் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என அறிவித்துள்ளதால் சில மாநிலங்கள் மாஸ்க் கட்டாயம் என்ற அறிவிப்பை வாபஸ் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மாஸ்க்
தமிழகத்தைப் பொருத்தவரை அடுத்த ஒரு அலை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்னும் 2 மாதங்களுக்கு மாஸ்க் அணிய வேண்டும் என்றும் மாஸ்க் அணிவதால் யாருக்கும் எந்த பாதிப்பை ஏற்படப் போவதில்லை எனக் கூறினார். அதேநேரம் மாஸ்க் அணியாதவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு, இனிவரும் காலங்களில் மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications