அதிரடியாக அதிகரித்த உறுப்பு தானம் பதிவு! 10 நாட்களில் இத்தனை பேரா? காரணம் இதான்.. அமைச்சர் பெருமிதம்
சென்னை: உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இந்நிலையில், கடந்த 10 நாட்களில் உறுப்பு தானம் செய்ய அதிகமானோர் பதிவு செய்துள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்த உலகத்தில் உள்ள மற்ற உயிர்களை போல மனிதனும் சக உயிர்தான். இப்படி இருக்கையில் இந்த உயிர் உடலை விட்டு பிரிந்த பின்னர் பயனற்றதாக ஆகிவிடுகிறது. எனவே இந்த பயனற்ற உடலின் பாகங்களை, மற்றவர்களுக்கு வழங்குவதன் மூலம் அதை பயனுள்ளதாக மாற்ற முடியும் என மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். மருத்துவ கண்டுபிடிப்புகளில் இது மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்பட்டது. இதன் பின்னர் உறுப்பு தானம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இருப்பினும் உறுப்பு தானம் செய்ய இன்றளவும் பலரும் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்த தயக்கத்தை உடைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அதன்படி சமீபத்தில், "உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படும்" என்று அறிவித்தது.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்" என்று X சோஷியல் மீடியா பதிவில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சரின் இந்த அறிவிப்பையடுத்து உறுப்பு தானம் செய்ய அதிகமானோர் பதிவு செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது X சோஷியல் மீடியா பக்கத்தில், "முதலமைச்சரின் உறுப்புக் கொடையாளர்களுக்கான அரசு சார்பிலான மரியாதை குறித்த அறிவிப்பிற்குப்பின் கடந்த 10 நாட்களிலேயே 1,616 நபர்கள் உறுப்பு தானம் செய்ய உறுதியெடுத்து பதிவு செய்துள்ளனர். இது வரையில் உறுப்பு தானம் செய்ய இந்த அளவில் பொதுமக்கள் ஆர்வமுடன் முன்வந்ததில்லை" என்று கூறியுள்ளார்.
உறுப்பு தானம் செய்வது மூலம் இறந்த பிறகும் ஒருவர் அதிகபட்சமாக 12 பேருக்கு மறு வாழ்வு அளிக்க முடியும். உறுப்பு தானம் அளிக்க விரும்புவோர் தமிழக அரசின் உடல் உறுப்பு தானத்துக்காகப் பதிவு செய்யக்கூடிய இணையதளத்தில் அல்லது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் பதிவு செய்து அட்டையை பெற்றுக்கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications