நடிகர் போண்டா மணியை ஓமந்தூரார் மருத்துவமனையில் நேரில் சந்தித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்
சென்னை: நகைச்சுவை நடிகர் போண்டா மணியை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் நலம் விசாரித்தார்.
170க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் போண்டாமணி. இவர் இலங்கை தமிழர். பிழைப்பு தேடி சென்னைக்கு வந்த போது வடிவேல், விவேக் ஆகியோருடன் இணைந்து சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்திருந்தார்.
இவர் வடிவேலுவுடன் ஒரு படத்தில் பிச்சைக்காரர் வேடத்தில் நடித்திருப்பார். வடிவேல் போலீஸாக நடித்திருப்பார். வடிவேல் போய் மாமூல் கேட்கும் கடைகளில் எல்லாம் போண்டா மணி பிச்சை கேட்கும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

வடிவேல்
அப்போது வடிவேல் ஏன்டா நான் வர்ற இடத்துக்கே வரேன்னு கேட்பார். அதற்கு போண்டா மணி, ஏட்டய்யா நீங்கள்தான் நான் வர்ற இடத்திற்கு வர்றீங்கன்னு சொல்வாரு, இப்படி இருவரும் சண்டை போடும் போது கடைக்காரர், சரி சண்டை போடாதீங்க, ரெண்டு பேரும் போய் அப்படி ஓரமா நில்லுங்கள் என சொல்வார். இந்த காமெடி எப்போது பார்த்தாலும் சிரிப்பை வரவழைக்கும்.

பருவக் காதல்
இவர் அண்மையில் பருவக் காதல் எனும் படத்தில் நடித்த போது நிஜ சாக்கடையில் விழுந்ததால் அந்த சாக்கடை நீர் நுரையீரலுக்குள் சென்றதால் அவர் அங்கேயே மயங்கினார். இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுக்கப்பட்டது. எனினும் அவருக்கு மூச்சுத்திணறல் இருந்து கொண்டே இருந்தது.

இரு சிறுநீரகங்கள்
இந்த நிலையில்தான் அவருக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தது அவருக்கு பேரிடியாக தலையில் விழுந்தது. மாற்றுத்திறனாளி மனைவி, 12 ஆவது படிக்கும் மகள், 10 ஆவது படிக்கும் மகன், குடும்பத்திற்கு வருமானம் ஈட்டும் ஒரே ஆள் நாம்தான். நமக்கு ஏதாவது ஒன்றாகிவிட்டால் என்ன செய்வது என வேதனை அடைந்தார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை
இதையடுத்துதான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முதல்வர் ஸ்டாலின் தனக்கு உதவ வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார். மேலும் நடிகர் சங்கத்திடமும் உதவி கேட்டுள்ளார். தான் யாரிடமும் இதுவரை எந்த உதவியும் கேட்டதில்லை. தற்போது கேட்கிறேன், மருத்துவ செலவுக்கு உதவுங்கள் என்றார். இவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது போன் மூலம் அமைச்சர் மா சுப்பிரமணியன் நலம் விசாரித்து வருவதாக போண்டா மணியே தெரிவித்திருந்தார்.

போண்டா மணி
இந்த நிலையில் போண்டா மணி அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் சென்றார். அங்கு சிறுநீரக பிரச்சினைக்கு சிகிச்சை பெறும் போண்டாமணியை சந்தித்து நலம் விசாரித்தார். மா சுப்பிரமணியத்தின் கைகளை பிடித்துக் கொண்டு உதவி கேட்டார். அமைச்சரும் அவருக்கு ஆறுதல் அளித்தார்.

தேர்தல் பிரச்சாரங்கள்
அதிமுகவில் இணைந்து தேர்தல் பிரச்சாரங்களை செய்தவர் போண்டாமணி. அவரை சந்திக்க இதுவரை எந்த அதிமுகவினரும் வரவில்லை. ஆனால் அமைச்சர் மா சுப்பிரமணியன் மனிதாபிமான அடிப்படையில் போண்டாமணியை நேரில் போய் சந்தித்துள்ளார். போண்டாமணி மட்டுமல்ல, கடந்த 3 தினங்களுக்கு முன்னர் இரு சிறுநீரகங்களும் செயல்படாமல் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பழம்பெரும் நடிகை ஜெயக்குமாரியை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

திமுக ஆட்சியில்
அதிமுக ஆட்சி காலத்தில் கொரோனா உச்சத்தில் இருந்தது. இதில் ஏராளமான பிரபலங்கள், விஐபிக்கள், நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் என பலர் கடுமையாக பாதிக்கப்பட்ட போதிலும் அவர்கள் குணமடைந்த பிறகு கூட எடப்பாடி பழனிசாமி அரசு சார்பில் யாரையும் நேரில் போய் பார்க்கவில்லை. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் எந்தவித பேதமின்றி யாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் முதல்வர் ஸ்டாலினோ அமைச்சர் மா சுப்பிரமணியனோ நேரில் பார்த்து ஆறுதல் தெரிவிப்பதை நல்ல விஷயமாக மக்கள் பார்க்கிறார்கள்.












Click it and Unblock the Notifications