சால்வை, பொக்கே வேண்டாம்.. கொடுத்தால் நிகழ்ச்சிக்கே வரமாட்டேன் -அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டிப்பு!
சென்னை : அரசு நிகழ்ச்சிகளில் சால்வை, பூங்கொத்து வழங்குவதை தவிர்க்காவிட்டால் நிகழ்ச்சிக்கே வர மாட்டேன் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், தனக்கு பொன்னாடை, பூங்கொத்துகள் வழங்கப்படுவதைக் கண்டித்து வருகிறார். பொன்னாடைக்குப் பதிலாக புத்தகங்களை வழங்குங்கள் என கட்சியினருக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
ஆனாலும், பல நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தப்படுவதும், பூங்கொத்துகள் வழங்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது.

அமைச்சர் கண்டிப்பு
இந்நிலையில், மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சால்வை, பூங்கொத்து கொடுத்தால் நிகழ்ச்சிக்கே வரமாட்டேன் என கண்டிப்போடு தெரிவித்துள்ளார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தேசிய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தினம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று கலந்துகொண்டார்.

நிகழ்ச்சிக்கே வரமாட்டேன்
இந்த நிகழ்ச்சியில் பேசிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் மக்கள் பிரதிநிதிகளுக்கு சால்வை, பூங்கொத்து வழங்குவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் நிகழ்ச்சிக்கே வரமாட்டேன்" எனக் கண்டிப்போடு தெரிவித்தார்.

இது எனது வேலை
மேலும் பேசிய அவர், "மக்கள் பிரதிநிதிகளை கௌரவிக்க, அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு இல்லை என்பதால் சிரமப்பட்டு வாங்குகின்றனர். இது தகுதியான செயலா என்ற கேள்வி உள்ளது. அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது எனது வேலை. இதில் பங்கேற்க வரும் எனக்கு பூங்கொத்து, சால்வை வரவேற்பு தேவையில்லை. அனைவரும் இதனை தவிர்க்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

மேடையிலேயே உத்தரவு
மேலும், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரிகளில் பூங்கொத்து வழங்குவது, சால்வை அணிவிப்பதை தவிர்க்க வேண்டும் என கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று மேடையிலேயே மருத்துவ கல்வி இயக்குனருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
