வெள்ளம் சூழ்ந்து.. வயிறு ஒட்டி பட்டினியாக இருந்த மூதாட்டி.. வீடியோ வெளியிட்ட இளைஞர்.. உதவிய அமைச்சர்
சென்னை: முகநூலில் வயதான மூதாடிக்காக வீடியோ பதிவு செய்த இளைஞரை உடனே அழைத்து விபரத்தை கேட்டறிந்து அந்த மூதாட்டிக்கு தேவையான உதவிகளை செய்த அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
Recommended Video
குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து சின்னாப்பினமாக்கியது. அமைச்சர் மனோதங்கராஜ் வெள்ள பாதிப்புகளை களத்தில் நின்று சரி செய்து வருகிறார். குறிப்பாக மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களுக்கும் சென்று மக்களுக்கு சரியான முறையில் உதவிகள் சென்றடைகிறதா என்று ஆய்வு செய்து வருகிறார்.
கடந்த இரு தினங்களுக்கு முன் கூட நிவாரண முகாம்களில் தங்கியிருந்த மக்களுக்கு உணவு, குடிநீர், பெட்ஷீட், மின்சாரம் வழங்காததால் அதிகாரிகளை கடிந்து கொண்ட அமைச்சர் அந்த மக்களுக்கு மேற்கண்ட உதவிகள் கிடைக்கும் வரை அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை.

14 ஆம் தேதி பதிவு
இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி முகநூலில் "Shiju Neppolian" என்பவர் கொல்லம்கோடு மஞ்சதோப்பு பகுதியில் வசிக்கும் ஒரு வயதான மூதாட்டி பரிதாபமாக பேசும் வீடியோ ஒன்றை பதிவிட்டு உதவி கோரியிருந்தார். காணொலியில் அழுது கொண்டே பேசும் மூதாட்டி "தான் அனாதையாக இருப்பதாகவும், தான் எதுவும் சாப்பிடவில்லை என்றும் தனது வயிறு எப்படி ஒட்டிக் கொண்டிருக்கிறது என கூறி அழுதார்.

மனோ தங்கராஜ்
இதை வீடியோவாக எடுத்த அந்த இளைஞர் பேஸ்புக்கில் பகிர்ந்து அந்த மூதாட்டிக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு கேட்டார். மேலும் இது போல் நிறைய பேர் வெள்ளத்தில் தத்தளித்து உணவு கூட இல்லாமல் படுக்க இடம் இல்லாமல் அவதிப்படுகிறார்கள் என்றார் அந்த இளைஞர். தண்ணீரில் சூழப்பட்டு கிடந்த மூதாட்டியின் வீடு அடங்கிய வீடியோவை அமைச்சர் மனோ தங்கராஜுக்கு டேக் செய்தார்.

அமைச்சர் பதில்
இதை முகநூலில் கவனித்த அமைச்சர் உடனடியாக Shiju- வின் பதிவில் "உங்கள் தொடர்பு எண்ணை பதிவு செய்யுமாறு கேட்டிருந்தார்". உடனடியாக தொடர்பு எண் பகிரபடவே இளைஞர் Shijuவிடம் தொடர்பு கொண்டு விபரத்தை சேகரித்த அமைச்சர் அங்குள்ள அரசு அதிகாரிகள் மற்றும் தன்னுடைய கட்சியினருக்கும் தகவல் கொடுத்து அடுத்த பத்தாவது நிமிடமே மூதாட்டியின் வீட்டிற்கு அனைத்து உதவிகளும் சென்றடைந்தது.

அமைச்சர் பதிவு
மேலும் மூதாட்டி பத்திரமாக மீட்கப்பட்டு உணவு, பெட்ஷீட், தலையணை என அனைத்தையும் கொடுத்து தற்காலிக முகாமில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டார். இதனை ஊர்ஜிதம் செய்யும் விதமாக அமைச்சர் பதிவு செய்த கமென்டின் கீழ் உதவி வந்தடைந்துவிட்டது என்று ரிப்ளை செய்திருந்தனர். சம்பவம் இடம் சென்ற அதிகாரிகள் Shiju - வையும் அழைத்து சென்றிருந்தனர்.

அமைச்சருக்கு பாராட்டு
அப்போது அதனை மீண்டும் வீடியோ எடுத்த இளைஞர் Shiju, அமைச்சர் மனோதங்கராஜ் அவர்களுக்கு நன்றி தெரிவித்து முகநூலில் பதிவிட்டுள்ளார். மூதாட்டிக்காக முகநூலில் கோரிக்கை வைத்த இளைஞருக்கும் உடனடியாக பதிலளித்து பத்தாவது நிமிடத்தில் அதிரடி நடவடிக்கை எடுத்து உதவி செய்த அமைச்சர் மனோதங்கராஜும் நெட்டிசன்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
