'மாஸ்டர் பிளான்..'கோவை மக்களுக்கு 1.5 வருடத்தில் செம திட்டம்.. நல்ல செய்தி சொன்ன அமைச்சர் முத்துசாமி
சென்னை: தமிழ்நாட்டில் முக்கிய மெட்ரோ நகரங்களில் ஒன்றான கோவை நகரின் மாஸ்டர் பிளான் 1994ஆம் ஆண்டுக்குப் பிறகு அப்டேட் செய்யப்படவில்லை. இந்நிலையில், இன்னும் 1.5 ஆண்டுகளில் புதிய மாஸ்டர் பிளான் வெளியிடப்படும் என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துச்சாமி உறுதி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மெட்ரோ நகரங்களில் நலிவுற்ற பிரிவினருக்குச் சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்றி வருவது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தான். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் வீட்டுவசதி வாரியம் வீட்டு மனைகளைக் கட்டி வருகின்றன.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் வீட்டுவசதி வாரியம் சார்பில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துச்சாமி ஆய்வு செய்தார்

அமைச்சர் முத்துசாமி
அதைத் தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கோவை நகரில் நடைபெற்று வரும் பணிகள், அதில் எந்தத் திட்டங்கள் மாற்றப்பட வேண்டும். எந்த திட்டத்தின் பணிகள் துரிதப்படுத்த வேண்டும் ஆகியவை குறித்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.

துணை நகரங்கள்
திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடியே சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களுக்கு அருகில் துணை நகரங்கள் அமைக்கப்படும். அவை மற்ற நகரங்களுக்கு ஒரு மாடலாக இருக்கும். இந்தத் திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். அதேபோல பெருந்துறை மற்றும் திருச்செங்கோட்டில் ஆட்டோ நகரை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். அது பொதுமக்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

பழுதடைந்த கட்டிடங்கள்
வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்ட கட்டிடங்களைச் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்படிப் பழுதடைந்த கட்டிடங்களைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்படும் கட்டிடங்கள் சட்டத்திற்குப் புறம்பாக இருக்கக் கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார்.

மாஸ்டர் பிளான்
விதிகளை மீறுபவர்களைக் கண்காணிக்கவும் தனியாகக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோவையின் மாஸ்டர் பிளான் 1211 சதுர கி.மீ பரப்பளவில் இருந்தது. அதில் இப்போது கூடுதலாக 1658 சதுர கி.மீ சேர்க்கப்பட்டுள்ளது. அடுத்த 1.5 ஆண்டுக்குள் புதிய மாஸ்டர் பிளான் வெளியிடப்படும்" என அவர் தெரிவித்தார்.

மாஸ்டர் பிளான் என்றால் என்ன
ஒருநகரின் நிலப் பயன்பாடு, புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியது மாஸ்டர் பிளான். ஒரு நகரத்தின் வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமானது. நகர சீரமைப்பு துறை சட்டத்தின்படி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது மாஸ்டர் திட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆனால், கோவைக்குக் கடந்த 1994ஆம் ஆண்டிற்குப் பிறகு மாஸ்டர் பிளான் மாற்றியமைக்கப்படவில்லை. இந்தச் சூழலில் தான் அடுத்த 1.5 ஆண்டுக்குள் புதிய மாஸ்டர் பிளான் வெளியிடப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications