'இனி தமிழகத்தின் எதிர்காலம் பாஜக' அண்ணாமலையை பாராட்டிய தேஜஸ்வி.. "பளிச்" பதிலடி கொடுத்த பிடிஆர்!
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளதாக வாழ்த்திய பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவுக்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த ஜன. 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. 21 மாநகராட்சிகள் ,138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ளாட்சி பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது.
இதில் ஆங்காங்கே சிறு பூசல்கள் நடைபெற்ற நிலையில், பெரும்பாலும் அமைதியான முறையில் தேர்தல் நடந்து முடிந்தது. அதில் சுமார் 60% வாக்குகள் பதிவாகி இருந்தது.

உள்ளாட்சி தேர்தல்
இதனிடையே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 268 வாக்கு எண்ணும் மையங்களில் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்தத் தேர்தலில் திமுக மிகப் பெரியளவில் வெற்றியைப் பெற்றுள்ளது. 21 மாநகராட்சிகள், 132 நகராட்சிகள், குறைந்தது 430 பேரூராட்சிகளில் திமுக கூட்டணி வென்றுள்ளது. குறிப்பாக 7700 வார்டுகளில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மோசமான ஒரு தோல்வியைப் பதிவு செய்துள்ளன.

பாஜக
கடந்த சில ஆண்டுகளாகவே அதிமுக உடன் இணைந்து பயணித்து வந்த பாஜக இந்த முறை தேர்தலில் தனித்துக் களமிறங்கியது. இதில் கணிசமான இடங்களில் பாஜக வெற்றி வாகை சூடியுள்ளது. மாநிலத்தில் மொத்தம் 308 வார்டுகளில் பாஜக வென்றுள்ளது. அதாவது 22 மாநகராட்சி வார்டுகள், 56 நகராட்சி வார்டுகள், 230 பேரூராட்சி வார்டுகளில் பாஜக வென்றுள்ளது. இதன் மூலம் திமுக, அதிமுக கூட்டணிக்கு அடுத்து மாநிலத்தில் 3ஆவது பெரிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளதாக என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தேஜஸ்வி சூர்யா
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெற்றுள்ள இந்த வெற்றிக்காக, பல்வேறு பாஜக தலைவர்களும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையைப் பாராட்டி வருகின்றனர். இதற்காக வாழ்த்து தெரிவித்துள்ள பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா தனது ட்விட்டரில், "தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவைப் பெரியளவில் வெற்றி பெற வைத்த அண்ணாமலைக்கு வாழத்துகள். தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்திய அவர், தமிழக மக்களுக்கு பாஜக வடிவத்தில் மாற்று உள்ளது என்ற நம்பிக்கையை அளித்துள்ளார். தமிழகத்தின் எதிர்காலம் பாஜகதான்" என்று பதிவிட்டுள்ளார்.

பிடிஆர் பதிலடி
இந்நிலையில், தேஜஸ்வி சூர்யாவின் இந்த கருத்து தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக பிடிஆர் தனது ட்விட்டரில், "சென்னையில் 200 வார்டுகளில் ஒரு வார்டிலும், மதுரையில் 100 வார்டுகளில் ஒரு வார்டிலும் பாஜக வென்றுள்ளது. இந்த வெற்றி தான் பாஜக எதிர்நோக்கிப் பாடுபடும் வெற்றி என்றால், அதிமுகவினர் ஜெயலலிதா குறித்துக் கூறுவது போல இவரே (அண்ணாமலை) தலைமை பொறுப்பில் இருக்க வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications